தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்து பெண் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பணிகளை விரைவாக முடிப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இருப்பினும் உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து நடந்து பின்னர் கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். இதில் கோடை உழவை அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை. காரணம் வயலை காற்றாடப் போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்துவர். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் கிடைக்கும் என்பதால்தான்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர். இந்த காலக்கட்டடத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இருப்பினும் ஆற்றுப்பாசனத்தை தவிர்த்து பம்ப் செட் மூலம் கோடை நடவுப்பணிகள் மேற்கொள்பவர்களும் அதிகம் உள்ளனர். குறிப்பாக அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், பாபநாசம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை சாகுபடி மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை. கூலி உயர்வு போன்ற காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு, விவசாயிகள் இப்பகுதியில் கோடை விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாகவும், உள்ளூர் தொழிலாளர்களை விட விவசாயப் பணிகளை வட மாநில தொழிலாளிகள் விரைவாக முடிப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்படும் அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகளை வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் செய்து வந்த நிலையில், தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பெண்களும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வடமாநில தொழிலாளர்களை விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று ஒரத்தநாடு உட்பட பல பகுதிகளில் உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்களை பணிகளை விரைவாக முடிப்பதால் செலவுகள் குறைந்து விடுகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.