20ம் நூற்றாண்டின் தங்கப்பயறு என்று அழைக்கப்படும் சோயா மொச்சையில் சுமார் 38- 40% புரதச்சத்தும் 18- 20% எண்ணெய் சத்தும் உள்ளது. தாவர புரத சத்து மிகவும் அதிகம் உள்ள பயிர் சோயா ஆகும். சோயாவை தனிபயிராகவும், நெல் தரிசு பயிராகவும், கரும்பு, வாழை, மரவள்ளி, மஞ்சள், தென்னையில் ஊடுபயிராகவும் பயிர் செய்ய உகந்தது.

ஏக்கருக்கு சராசரியாக 11 62 கிலோ மகசூல் கொடுக்கிறது. 1972ல் காவிரி பாசனப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு 1990 முதல் வணிக ரீதியாக பயிரிடப்பட்டு வருகிறது. தைப்பட்டம்: கோ2, 3, பஞ்சாப் 1, டிஎஸ்பி 21 ரகங்கள். பொதுவாக சோயா ரகங்கள் 75- 90 நாட்கள் வயது உடையது.
விதைகளை ஏக்கருக்கு இறவையில் 25 கிலோவும், ஊடுபயிராக ஏக்கருக்கு 10 கிலோவும் போதுமானது.

பூஞ்சாண விதை நேர்த்தி


விதையிலிருந்து பரவும் நோய்களால் வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் நுனிக்கருகல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பன்டசிம் 2 கிராம் அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.






நுண்ணுயிர் விதை நேர்த்தி


ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவுடன் ஆறிய கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்து விதைகளை 30 நிமிடம் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

விதைகளை 2, 3சென்டிமீட்டர் ஆழத்தில் 30க்கு 10 சென்டிமீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும். வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் செடிக்கு செடி 10 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு குழிக்கி இரண்டு விதை வீதம் ஊன்ற வேண்டும், பயிர் எண்ணிக்கை சதுர மீட்டருக்கு 33 என்ற அளவில் இருக்க வேண்டும்.

200 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் இருந்து 22 கிலோ கந்தகச்சத்து கிடைப்பதால் தனியாக கந்தக உரம் தேவை இல்லை பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அடியுரமாக இடவேண்டும். துத்தநாக குறைபாடு உள்ள மண்ணிற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் 5 டன் தொழு உரம் கலந்து மண்ணில் இடவேண்டும். மாங்கனிசு பற்றாக்குறை உள்ள இடங்களில் ஏக்கருக்கு 10 கிலோ மாங்கனிசு சல்பேட் உடன் தொழு உரம் கலந்து மண்ணில் இடவேண்டும். அல்லது ஒரு சதம் மாங்கனீசு கரைசலை இலை மூலம் 20- 30 மற்றும் 40ம் நாளில் தெளிக்க வேண்டும்.

அதிக காய்கள் பிடிக்கவும் மணிகள் திரட்சியாக வருவதற்கு இரண்டு சதம் டிஏபி கரைசல் (நாலு கிலோ டிஏபி, 200 லிட்டர் தண்ணீரில்) பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்களில் கலந்து தெளிக்க வேண்டும்.

களை கட்டுப்பாடு

மண்ணில் போதுமான ஈரம் இருக்குமாறு உறுதி செய்த பின் விதைத்த மூணாம் நாள் ஏக்கருக்கு பென்டிமெதலின் 1.3 லிட்டர் களைக் கொள்ளியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அகன்ற இலை களைகள் அதிகமாக இருப்பின் களைகள் 2-3 இலைப்பருவத்தில் 10 -15 நாட்களில் ஏக்கருக்கு இமாசிதபையர் 240 மில்லி களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் களைக்கொல்லி பயன்படுத்த முடியாத நிலையில் விதைத்த 15- 30 ஆவது நாளில் இரண்டு கைக்களை அவசியம்.

பயிர் பாதுகாப்பு

வயலில் தண்டு ஈ தாக்குதலை குறைக்க ஒரு கிலோ விதையுடன் 30 இ.சி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல் 5 மில்லி பூச்சிக்கொல்லி மருந்துகள் விதை நேர்த்தி செய்யலாம். விதை மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு டி.விரிட்டி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்யலாம்.




இலைகள் பழுத்து விழத் தொடங்கும் போது காய்கள் 80 சத முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை தரை மட்டத்தில் அரிவாள் மூலம் அறுவடை செய்து உலர வைத்து விதைகளை பிரித்து எடுக்கலாம். இப்படி செய்வதால் செடியின் வேர்கள் மண்ணிலேயே தங்கி மண்ணின் வளத்தை பெருக்கும். சராசரியாக ஏக்கருக்கு இறவையில் 660  கிலோவும், நெல் தரிசில் 500 கிலோவும் மகசூல் கிடைக்கும்.