தஞ்சாவூர்: காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை உறுதி செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
ஜீவக்குமார்: காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை உறுதி செய்ய வேண்டும். கடந்த அரசாங்கம் செய்ததில் குறைபாடு இருந்தாலும் அதனை இந்த அரசு நிவர்த்திக்க வேண்டும். வேளாண் சார்ந்த தொழில் நடத்த இங்கு நல்ல வாய்ப்பும் உண்டு. வேறு தொழில் வந்தால் விவசாயம் பாதிக்கப்படும். செங்கிப்பட்டி பகுதியில் இயற்கை உரங்களாகிய மண்புழு உரத்தொழிற்சாலை தேவையே தவிர வேறு தொழில்பேட்டை வேண்டாம். பயிரிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பூச்சி போன்ற தாக்குதல் வராமல் பாதுகாக்க ஒட்டுமொத்த ஏற்பாடு வேண்டும். தூர்வாருதல் பணியுடன் ஏரி,குளங்களின் கொள் அளவை உயர்த்த கரைகளைப் பலப்படுத்தும் திட்டம் தேவை. பூதலூர்,ராயமுண்டான்பட்டி ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் இயங்க அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
கே.எஸ் முகமது இப்ராஹிம்: சமீபத்தில் பெய்த கனமழை , ஃபெஞ்சல் புயலால் ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் சுமார் மூவாயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்ட இளம் நடவு நெல்பயிர்கள், பாபநாசம் வட்டத்தில் உள்ள ராஜகிரி, பண்டரவாடை பகுதியில் வெற்றிலை பயிர்கள் ஏக்கர் கணக்கான பயிர்கள் பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதேபோல திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் வாழைகள் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய வெள்ளம் நிவாரணம் நிதியை வழங்க வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நமது மாவட்டத்தில் விளையும் செங்கரும்பு, தேங்காய், அச்சு வெல்லம் போன்றவற்றை விவசாயிகள் நலன் கருதி நேரடியாக அரசு கொள்முதல் செய்து அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் வட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை, கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்து விட்டது. ஆனால் பாலத்தின் இருபுறங்களிலும் சாலைகளை இணைத்து சில ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதை அகற்றி உடனடியாக புதிய பாலம் முடித்து அதை மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். பாபநாசம் சீனிவாச தெப்பக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஏ கே ஆர் ரவிச்சந்தர் : சம்பா தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்னும் அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களோடு இதை அறிவிக்க வேண்டும். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சிக்கொல்லி பாதிப்பு ஏற்படும் உள்ளது. எனவே வேளாண் துறை வாயிலாக சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை விலை இல்லாமல் வழங்க வேண்டும்.
பட்டுக்கோட்டை தாலுக்கா அலிவலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2020- 2021ம் ஆண்டில் பயிர் கடன் மற்றும் நகை கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் அவர்களுடைய நகைகள் திருப்பித் தரப்படாமல் உள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெஞ்சில் புயல் மழையில் சேதம் அடைந்த நெற்பயிர் உட்பட அனைத்து வேளாண் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் இணைப்பு கொடுத்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் செய்வது மட்டுமல்லாமல் கரும்பு சாகுபடி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். கடந்த எட்டாம் தேதி அன்று தோழகிரிப்பட்டியில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 12 ஆடுகள் ஒரு மாடு இறந்து போய்விட்டது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு சர்க்கரை கட்டுமானத்தை 10.25 க்கு விலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பிணையில்லாமல் பயிர் கடன் ரூ.1.60 லட்சம் என்பதை உயர்த்தி ரூ.2 லட்சமாக தரப்படும் என்பதை மறுபரிசீலனை செய்து அதனை ரூ. 3 லட்சமாக அறிவிக்க வேண்டும்.
புண்ணியமூர்த்தி : ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அய்யம்பட்டி - கீழாத்தூர் சாலை மயானம் வரைக்கும் 500 மீட்டர் மிகவும் பழுதடைந்துள்ளது இந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்றி தர பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பாச்சூர் ஊராட்சியில் உள்ள ஓடைக்குளம் தூர்வாரி கரை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகையாக ரூ.750 உயர்த்தி தர வேண்டும். கல்லணை கால்வாய் உளவயல் வாய்க்காலில் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதை அகற்ற வேண்டும். தற்போது மானாவாரி பகுதிகளில் நிலக்கடலை விதைக்கும் பணி தீவிரமாக இருப்பதால், தரமான, முளைப்புத்திறன் அதிகம் கொண்ட விதையை வேளாண்மை துறை மூலம் வழங்க வேண்டும்.
அறிவழகன் : வேளாண் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் வாடகைக்கு நவீன ட்ரோன் வழங்க வேண்டும். 100 நாள் பணியாளர்களை களையெடுக்க பயன்படுத்த அல்லது 100 நாள் பணியை ஒரு மாதத்திற்கு நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 13.பெரம்பூர் மற்றும் ஒக்கக்குடி வருவாய் கிராமத்தில் காட்டுப்பன்றி விளை நிலங்களை சேதப்படுத்துகிறது. இதைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மின்னணு பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.எஸ்.வீரப்பன்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு நகரப் பகுதிகளில் மூன்று கிலோ கோதுமை மாதந்தோறும் வழங்குவது போல், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் மாதந்தோறும் கோதுமை வழங்க வேண்டும்.
யுவராஜ்: நாயக்கர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து தரவேண்டும். சாத்தனூர் சாலையை சீரமைக்க வேண்டும், பல ஆண்டுகளால் பட்டா கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.