பயிர்க் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

ஒரத்தூர் மு. பிரகலாதன்: வெண்ணாற்றில் பூதலூர் அருகே ஒரத்தூருக்கு கிழக்கே தூர் வாரப்படாமல் உள்ளதால், ஆறு மிக மோசமாக உள்ளது. இதைத் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பலாபட்டு தங்கவேல்: பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் முன்பு ஆவணங்கள் சரியில்லை எனக் கூறி நிதி வழங்கவில்லை. இப்போது, ஆவணங்கள் சரியாக இருந்தும் கிடைக்கவில்லை.

கக்கரை சுகுமாறன்: இத்திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது. கடந்த ஆண்டு ரூ. 21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 16,000 கோடியாகக் குறைத்துவிட்டது. இதற்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்தால்தான் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

புலவன்காடு மாரியப்பன்: பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் காப்பீடு செய்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கிடைக்கவில்லை. என்றாலும், நிகழாண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இணைந்துள்ளனர். வயல் வரப்புகளில் பனை விதைகளை விதைப்பதற்கு பதிலாக கிராமத்தில் பொதுவாக உள்ள ஏரி, குளம், ஆற்றங்கரைகளில் விதைத்தால் மண் அரிப்பைத் தடுக்கலாம்.

ராயமுண்டான்பட்டி கண்ணன்: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் குறைவாக இருந்ததால், நிறைய விவசாயிகளால் சேர முடியவில்லை. எனவே, பயிர்க் காப்பீட்டில் சேருவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 195 நிலுவைத் தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.


இதற்கிடையில் வரும் 21ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் மழையில் மூழ்கியிருந்தன. இவற்றை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் மும்முரமாக இருந்தனர். தற்போது பயிர்களுக்கு உரம் தெளித்தல் மற்றும் களை எடுத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. எனவே காலக்கெடுவை வரும் இம்மாத இறுதிவரை அதாவது 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர் என்று தெரிவித்தனர்.