தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர். சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். இதற்கான அர்த்தம் சோழ நாடான தஞ்சையில் நிறைய நெல் விளைந்து மக்களோட பசியைப் போக்கியது என்பதுதான். அந்த வகையில் நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் வெகு மும்முரம் அடைந்து வருகிறது. கடந்தாண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்தது. இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் போதுமான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டினர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 32 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தண்ணீரின்றி காயுது வயல்... கருகுது நெற்பயிர்: ஒரத்தநாடு அருகே குடங்களில் தண்ணீர் பிடித்து ஊற்றும் விவசாயிகள்
என்.நாகராஜன் | 03 Aug 2023 04:05 PM (IST)
கருகி வரும் பயிர்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு தண்ணீரை ஊற்றி வருகிறார்கள்.
குடங்களில் தண்ணீரை ஊற்றும் விவசாயிகள்
Published at: 03 Aug 2023 04:05 PM (IST)