தஞ்சாவூர்: விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதை அடுத்த தலைமுறையினருக்கும் விவசாயிகள் கற்றுத் தர வேண்டும் என்று தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வலியுறுத்தினார். 


தஞ்சாவூரில் தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில், வாழை மற்றும் தென்னை பயிர்களின் மதிப்பு கூட்டல் சார்ந்த வேளாண் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.


நிறுவன இயக்குநர் பழனிமுத்து வரவேற்றார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கருத்தரங்கத்தை தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தொடக்கி வைத்து பேசியதாவது:


இந்தியாவில் 40 சதவீத உணவுப் பொருட்கள் அழுகி வீணாகி வந்தது. அதனால் அந்த பொருட்களை சேமித்து, பதப்படுத்தி, மதிப்பு கூட்ட இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வாயிலாக இப்பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் விவசாய, விளைப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட மதிப்பு கூட்டி விற்பனை செய்து கூடுதல் லாபம் கிடைக்கும். மதிப்பு கூட்டி விற்பனை செய்வதை விவசாயிகள், தங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தர வேண்டும்.




இந்த தொழில்நுட்பத்தை மேற்கொள்ள வங்கிகள் கடனுதவியை வழங்கி வருகிறது. இதுகுறித்து இளைஞர்களிடம் அதிகளவில் விழிப்புணர்வை இதுபோன்ற நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.


கருத்தரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் டிகேஜி.நீலமேகம், பேராவூரணி நா.அசோக்குமார், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கில் வாழை மற்றும் தென்னை பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் அருண்குமார், பேராசிரியர்கள் ரவீந்தரநாயக், சுரேஷ்குமார், அமுதசுரபி, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.


தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் 100க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இந்த கருத்தரங்கில் தென்னை மரத்திலிருந்து தேங்காய் இளநீர் மட்டும் இல்லாமல் தேங்காய் எண்ணெய், தேங்காய் பூ, தேங்காய் பவுடர், பிஸ்கட்,  நீரா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நேரத்தில் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு லாபம் அடைய முடியும். இதற்கான தொழில் நுட்பம் மற்றும் மானியம் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுவதாகவும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.


மேலும் தஞ்சாவூர் கும்பகோணம் திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழைப்பழம், வாழை இலை மட்டும் இல்லாமல் வாழை மரத்தில் இருந்து நாரினால் செய்யக்கூடிய பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் நார் சம்பந்தமான பொருட்கள் உள்ளிட்டவையும் வாழைப்பழத்தில் இருந்து ஊறுகாய், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.


இதனை எப்படி செய்ய வேண்டும். அதற்கான பயிற்சிகள், பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது, தொழில்நுட்பம், மானியம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட வாழை, தென்னை விவசாயிகள் ஆண்டில் பல மாதம் போதிய அளவுக்கு விற்பனை செய்ய முடியாமலும் உரிய விலை கிடைக்காமலும் உள்ள நேரத்தில் இது போன்ற பயிற்சிகள் அளிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.


மேலும் டெல்டா மாவட்டங்களில் வாழை தென்னை மதிப்பு கூட்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.