தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. அதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன. மேலும், கடந்த 2 மாதங்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலை விட கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.




கடுமையான வறட்சி காரணமாக மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சியை தாங்கி நிற்கக்கூடிய பனைமரங்களால் கூட இந்த ஆண்டு நிலவும் மிக கடுமையான வறட்சியை தாங்க முடியவி்ல்லை. மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, பனை மரங்கள் தண்ணீரின்றி கருகி மடியும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மரணத்தருவாயில் இருக்கும் தென்னை, பனை மரங்களின் உயிரை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.




இதுகுறித்து விவசாயி குணசீலன் வேலனிடம் கேட்டபோது, “கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. நிலத்தடி நீர் சுரண்டல்: கடும் வறட்சியை கூட தாங்கக்கூடிய பனை மரங்கள் இந்த அளவுக்கு கருகும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதே காரணம். அதுபோல மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை குளங்களில் முறையாக சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்காததுமே இந்த அழிவுக்கு காரணம். உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் பல இடங்களில் தென்னை மரங்கள் முற்றிலும் கருகி பாலைவனம் போல காட்சியளிக்கிறது. சில பகுதிகளில் குறைந்த அளவு நிலத்தடி நீர் இருந்தாலும் அது உவர் நீராக உள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதன் விளைவாக கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக மாறியுள்ளது. இந்த தண்ணீர் மூலமாவது தென்னை மரங்களை பாதுகாக்க முடியுமா என விவசாயிகள் போராடி வருகின்றனர். எனது தோட்டத்திலும் 150 தென்னை மரங்களை பாதுகாக்க போராடி வருகிறேன். சில விவசாயிகள் தென்னை மரங்களை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். அடுத்த ஓரிரு மாதங்களில் மழை பெய்யவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும்.




கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை, பனை மரங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டும். அதுபோல வட்சியால் கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்றார்.