நெல்லில் இலை சுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறை

   


செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்பொழுது நிலவும் தட்பவெட்ட நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலை சுருட்டு புழு அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இலை சுருட்டு புழு தாக்குதலை செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர். அசோக், வேளாண்மை துணை இயக்குநர் து.செல்வபாண்டியன், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின்  திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் துரைசாமி அவர்கள் இணைந்து, நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை கடைபிடிக்க விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.


இலை சுருட்டுப் புழுக்கள் நெற் பயிர் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றில் உள்ள பச்சை நிற திசுக்களை சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காணப்படும். இலைகள் நீள வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலும், அதிகமாக தழைசத்து யூரியா உரம் இடப்பட்ட பகுதிகளிலும்  மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதலை கட்டுப்படுத்திட கீழ்வரும் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறது.



  • வரப்புகளை சீராக்கி அதனை புல் பூண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

  • ஆரம்ப நிலையில் இதன் தாக்குதலை கட்டுப்படுத்த  ஏக்கருக்கு 400 மிலி என்ற அளவில் வேப்ப எண்ணெய் (அசாடிராக்டின் 0.03 %) தெளிக்கலாம்.

  • தாய் அந்து பூச்சிகள் காணப்பட்டால் 2.5 ஏக்கர் பரப்பளவிற்கு விளக்கு பொறி ஒன்றினை வைத்து அவற்றை கவர்ந்து அழிக்கலாம். 

  • தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.

  • கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 %WP400 கிராம்/ஏக்கர் 



  • புளுபென்டிமைட் 20 % WG 80 கிராம்/ஏக்கர் 

  • தியாமெதோக்சம் 25 % WG 50கிராம்/ஏக்கர் 

  • பிப்ரோநில் 5 % SC 500 மிலி /ஏக்கர்