நாகப்பட்டினத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். 


நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையிலான உரம், விதை உள்ளிட்ட குறுவை தொகுப்பினை ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அருண் தம்புராஜ் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாகை மாவட்ட விவசாயிகள் குருவை சாகுபடி பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 




மேலும், தமிழக அரசு அறிவித்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என்றும்,  குறுவை சாகுபடிக்கு தேவையான 9 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவும், 390 மெட்ரிக் டன் பொட்டாசியமும், 403 மெட்ரிக் டன் டிஏபி உரங்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார்.


இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில், நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்து சேர்ந்ததால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 61 கோடி ரூபாய் குறுவை தொகுப்பு திட்டம் அரசு அறிவித்துள்ள நிலையில் நாகை மாவட்டத்திற்கு 3000 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்ட உதவி அறிவித்து திட்டம் தொடங்கி தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சுமார் ஐம்பதாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 3000 ஏக்கர் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து முதல் பத்து விவசாயிகள் வரை மட்டுமே பயன்பெறுவார்கள் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ச்சியாக வெள்ளம், வறட்சி என பாதிக்கப்படும் நாகை மாவட்டத்திலுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்காவது குறுவை தொகுப்பு திட்ட உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண