மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சோழன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, கால்ஸ் குழுமம் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, கரும்பு மற்றும் நெல் விவசாயிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்தின. டெல்டா பகுதியில் கரும்பு மற்றும் நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், நவீன நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Continues below advertisement

முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்திற்கு திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை துணை மேலாளர் சுப்பையன் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குச் சாகுபடி பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இக்கூட்டத்தில் ஆனந்தகுடி, பொன்னூர், பாண்டூர், சோழன்பேட்டை, திருமங்கலம், காளி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கரும்பு விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்படும் சலுகைகள்

கூட்டத்தில் விவசாயிகளிடையே ஆலை முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் பேசியதாவது; "மயிலாடுதுறைப் பகுதியில் கரும்பு விவசாயத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர ஆலை நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. கரும்பு பயிரிட விரும்பும் விவசாயிகளுக்குத் தேவையான வங்கி கடனுதவிகள் ஆலை நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.13,000 மானியமாக வழங்கப்படும்.விவசாயிகளின் சொந்த நிலத்திலேயே தரமான விதை கரும்பு உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

Continues below advertisement

பயிர் பாதுகாப்பிற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சாணக் கொல்லி மருந்துகள், நுண்ணூட்டச் சத்து உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்தும் 50 சதவீத மானிய விலையில் ஆலையின் மூலமாகவே நேரடியாக வழங்கப்படும். கரும்பு அறுவடை செய்யப்பட்டு ஆலைக்கு ஏற்றி முடிந்தவுடன், அதற்கான கிரயத் தொகை அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

இயற்கை விவசாயம் மற்றும் உர நிர்வாகம்

இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, மண் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.‌ மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு மற்றும் அதிகாரி விஜயராகவன் ஆகியோர் பேசுகையில், நெல் சாகுபடியில் மத்திய அரசால் வழங்கப்படும் உரங்களின் பயன்பாடு, அடி உரம் சரியான அளவில் மற்றும் சரியான முறையில் பயன்படுத்தும் விதம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

விவசாயிகளின் வரவேற்பு

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில், "தற்போது நிலவி வரும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்றுப் பயிராகக் கரும்பு சாகுபடி சிறந்த தேர்வாக அமையும். கரும்பு பயிரிடுவதன் மூலம் குறைந்த தண்ணீரில் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பல்வேறு மானியத் திட்டங்களும், கடன் உதவிகளும் எங்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன. எனவே, வரும் பருவத்தில் கரும்பு உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக கரும்பு அலுவலர் ஜெயபாண்டியன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் கரும்பு ஆய்வாளர்கள் கணேசன், லோகேஷ் மற்றும் ஆலை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.