மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், வேளாண்மை சார்ந்த பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. 

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான விவசாயிகள் மற்றும் வேளாண்மை, கூட்டுறவு, பொதுப்பணி, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சாகுபடிப் பணிகள், பாசன வசதிகள், கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் கடன் உதவிகள் தொடர்பாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக முன்வைத்தனர்.

11 மையங்களில் தேங்கிய 60,000 மெட்ரிக் டன் நெல்

கூட்டத்தில் பேசிய விவசாயி இளம்பருதி, கடந்த குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பருவங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 60,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தேங்கிக் கிடப்பதைச் சுட்டிக்காட்டினார்.

Continues below advertisement

எடமணல், தலைஞாயிறு சக்கர ஆலை, குத்தாலம், சித்தக்காடு, பெருஞ்சேரி, வழுவூர், மாணிக்கப்பங்கு உள்ளிட்ட 11 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) கிடங்குகள் மற்றும் கேப் சேமிப்பு மையங்களில் இந்த நெல் மூட்டைகள் நீண்ட காலமாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட பழைய நெல்லை உடனடியாக அரைவைக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்வதால், அதன் தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

குறிப்பாக, இந்தத் தேங்கிய நெல்லை தற்போதைய நிலையில் அரைவைக்கு அனுப்பாமல், அடுத்த சம்பா பருவத்திற்கு அனுப்பினால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி புழுக்கள் நிறைந்ததாகவும், தரமற்றதாகவும் மாறும் நிலை உருவாகும் என்று கூறினார். ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயக் குடும்பங்கள் உண்ணும் ரேஷன் அரிசியின் தரத்தைக் காக்க, சேமிப்பு மையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரைவைக்கு அனுப்பி அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பயிர்க்கடன் வழங்குவதில் பாரபட்சம் எனக் குற்றச்சாட்டு

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. விவசாயிகள் தங்கள் சாகுபடிப் பரப்பு மற்றும் தேவைக்கேற்ப முழுமையான பயிர்க்கடனைக் கோரும்போது, சம்பந்தப்பட்ட சங்கங்களின் அதிகாரிகள் தன்னிச்சையாகக் கடன் தொகையைக் குறைத்துக் கொடுப்பதாக விவசாயி இளம்பருதி குற்றம் சாட்டினார்.

மேலும், பயிர்க்கடன் ஒதுக்கீடு மற்றும் வழங்குவதில் விவசாயிகளிடையே பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இதனால் உரிய நேரத்தில் சாகுபடி முதலீடுகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதாகவும் புகார் கூறினார்.

வாய்க்கால் வெட்டும் பணிகளில் சுமார் ரூ.30 லட்சம் முறைகேடு

வேளாண் பொறியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் வாய்க்கால் வெட்டும் மற்றும் தூர்வாரும் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். களத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே வாய்க்கால் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 20 முதல் 30 கிலோமீட்டர் வரை பணிகள் செய்யப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதன் மூலம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிற்குப் போலி பில்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கிராமச் சூழலுக்கு ஒவ்வாத இறைச்சி விற்பனை விளம்பரம்

கூட்டத்தில் மற்றொரு சமூகச் சூழல் சார்ந்த பிரச்சினையையும் அவர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் '1 கிலோ பன்றி இறைச்சி வாங்கினால் 1 கிலோ இலவசம்' என்ற வாசகத்துடன் விளம்பரப் பலகைகள் வைத்து விற்பனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கிராமப்புறச் சூழலுக்கு ஒவ்வாத வகையில் அமைந்துள்ள இந்த விளம்பரப் பலகைகளையும், தொடர்புடைய விற்பனை நடவடிக்கைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆட்சியரின் விசாரணை உறுதிமொழி

விவசாயி இளம்பருதி முன்வைத்த அனைத்துப் புகார்கள் மற்றும் கோரிக்கைகளையும் கவனத்துடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தேங்கிய நெல் அரைவை, கூட்டுறவுக் கடன் விவகாரம், வேளாண் பொறியியல் துறை வாய்க்கால் பணி முறைகேடு புகார் மற்றும் விளம்பரப் பலகை விவகாரம் ஆகியவை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். விசாரணையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூட்டத்தில் உறுதியளித்தார்.