தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டத்தின் விவசாயிகளுக்கு பயனளிக்காது எனவும் அதில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என மயிலாடுதுறையில் விவசாயிகள் போஸ்டர் ஒட்டி அரசுக்கு தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.
காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம்
தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இங்கு பம்புசெட் நீரை கொண்டு எப்போதும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் மவாட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்கா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரிநீர் கிடைக்காததால் ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்யபவர்கள் விவசாயம் செய்யாத நிலையில், பம்புசெட் நீரை கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்துள்ள அரசு
அதனை அடுத்து தமிழக அரசு இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால் நேரடி விதைப்பு மற்றும் கூலிஆட்கள் கொண்டு நடவு செய்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து, மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நடவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் தொகுப்பு திட்டத்தில் சேர்த்து பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறைத்தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விவசாயிகளின் கருத்து
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டது. பம்புசெட் நீரை கொண்டு இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 4 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டது. ஆட்சிமாற்றத்திற்கு பிறகு திமுக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு உரங்கள் மட்டும் விலையின்றி ஒரு ஹெக்டேருக்கு கடந்த ஆண்டுவரை வழங்கி வந்தது. ஆனால், இந்த ஆண்டு இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததால் இயந்திர நடவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும்தான் குறுவை தொகுப்பு திட்டத்தால் 4 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் சாகுபடியில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாவட்டத்திற்கு 21 ஆயிரத்து 370 ஏக்கருக்கு மட்டும் பணம் வழங்கவும், அனைத்து விவசாயிகளுக்கும் பரவளாக பணம்கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் மடடும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறு,குறு விவசாயிகள் என்றாலே 3 ஏக்கர் அளவிற்கு நிலம் வைத்திருப்பார்கள். அதிக அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டம் பயன்அளிக்காது என்றாலும் சிறு, குறு விவசாயிகள் கூட பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு விவசாயி 10 ஏக்கரில் இயந்திர நடவு செய்திருந்தால் அவருக்கு ஒரு ஏக்கருக்குத்தான் குறுவை தொகுப்பு என்று கொடுக்கிறார்கள். விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல், ஜிபிஆர்எஸ் கேமரா மூலம் வயலில் நின்று புகைப்படம், ரேஷன்கார்டு, வங்கி பாஸ்புத்தகம், ஆதார்கார்டு ஆகியவை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.
விதிமுறைகளில் மாற்றம் செய்ய கோரிக்கை
ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பேரின் பெயரில்கூட போட்டு பயன்பெற முடியாது என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் 21 ஆயிரத்து 370 ஏக்கர் நடவு செய்யப்பட்ட இயந்திர நடவிற்கு முழு அளவில் பணம்கொடுக்க முடியாமல் பணத்தை திருப்பி அனுப்பும் நிலையை ஏற்படுத்துகின்றனர். கொடுப்பதுபோல் அரசு அறிவித்துவிட்டு விவசாயிகளுக்கு கிடைக்கவிடாமல் விவசாயிகள் பெறதகுதியில்லை என்று திருப்பி எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை விதிமுறையின் மூலம் ஏற்படுத்துகின்றனர். இது குறித்து தமிழக அரசு தனிகவனம் செலுத்தி குறைந்த பட்சம் ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பளிற்காவது குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிமுறைகளை மாற்றம் செய்து குறுவை தொகுப்பை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.