பிரதான தொழிலான விவசாயம் 

காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி தாலுக்காவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி நீர் ஆனது இந்த மாவட்டத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கு பயன்பட்டது இல்லை. காரணம் பல இடங்களில் முறையாக தூர்வாராததும், ஏ, பி வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி சி, டி வாய்க்கால்கள் எப்போதும் தூர்வாரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது.

நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் 

ஆகையால் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு அதிக அளவில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அதற்காக அதிகளவில் மின் மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரை கொண்டு சிலர் முப்போகம் விவசாயம் மேற்கொள்கின்றனர். அதற்காக தடையில்லா முன்முனை மின்சாரம் வேண்டி கடந்த காலங்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தற்போது 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் பெற்று சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கி உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விவசாயத்தில் முன்புறமாக ஈடுப்பட்டுள்ளனர். 

 

ஆட்கள் பற்றாக்குறை 

தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மாவட்டம் மயிலாடுதுறை. மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடை பணி முழுவதும் இயந்திரம் மூலம் நடந்து வந்தாலும், நடவுப்பணிகளில் இன்னமும் நாற்றுவிட்டு பெண் கூலிதொழிலாளர்களை கொண்டு நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும், இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்காக பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்த நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்களை வைத்து நடவுபணிகளை செய்து வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகளின் பொது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. 

 

வடமாநில தொழிலாளர்களை நாடிசென்ற விவசாயிகள் 

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது கட்டம் கட்டும் பணி உள்ளிட்ட மற்ற தொழில்களில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபடுத்த படுவது போல, வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.

தமிழக வயல்வெளி ஒலிக்கும் இந்தி பாடல்கள் 

விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளிகள் தங்களின் களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரபிரசாதமாக உள்ளதாகவும், இனி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயம் தடைபடாது என்று ஒருசில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

21 மேற்குவங்க தொழிலாளிகள் 

குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் விவசாயி மகோதேவன் என்ற விவசாயி 40 ஏக்கர் நிலத்தில் முன்பட்ட குறுவை நடவு செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் மேற்குவங்கம் மாநில கூலி தொழிலாளர்களை நடவு செய்ய களம் இறக்கியுள்ளார். நிலத்தில் வந்து தங்கியுள்ள 21 மேற்குவங்க ஆண், பெண் கூலி தொழிலாளர்கள் ஒப்பந்த ஏக்கருக்கு 4500 ரூபாய் சம்பளத்தில் 8 பெண்கள் உள்ளிட்ட 21 தொழிலாளர்கள் முன்பட்ட குறுவை நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களே நாற்றுப்பறித்து, நாற்றுகளை கட்டி தலையில் சுமந்து வந்து விவசாய நிலத்தில் திருந்திய நெல்சாகுபடி முறையில் மிக நேர்த்தியாக நடவு செய்கின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கி மாலை 6மணி வரை வேலை செய்யும் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் முதல் 8 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர் களைப்பு தெரியாமல் இருக்க பெங்காலி பாடல்களை பாடி மிகநேர்த்தியாக கைநடவு செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் கிடைக்கும் இடத்தில் தங்கி கொள்வதாகவும், அவர்களே உணவு சமைத்து சாப்பிட்டு கொள்வதாகவும் சமைப்பதற்கு விவசாயிகள் அரிசி மட்டும் வழங்குவதாகவும் தங்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மேற்குவங்க தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது வரபிரசாதமாக உள்ளதாக வைகல் கிராம விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

அதே சமயம், தமிழகத்தில் முன்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தமிழர்களின் பணியில் மாநிலத்தவர்கள் அங்கம் வகிக்கும் சூழலில், வயல் வேலைகளிலும் இந்தி (வட மாநிலத்தவர்கள்) புகுந்துள்ளது ஒர் அபாயகரமானது என்றும்,

 

 

நாட்டுப்புற பாடல்களை காலம் காலமாக பெண்களும், ஆண்களும் ஏலேலோ ஐலசா... தன்னானே தானானே... ஆராரோ ஆரிராரோ... என காடுகளிலும், வயல்களிலும், மலைகளிலும் தங்கள் சூழலுக்கு ஏற்ப வேலை செய்யும் பொழுது பாட கேட்டுக் கொண்டிருந்த காதுகள் நமது. வேலை பலு தெரியாமல் உற்சாகத்துடன் வேலை செய்வதற்கு மட்டும் பாடப்பட்டது அல்ல இந்த பாடல்கள். தற்போதும் இந்தப் பாடல்களை ஆகப்பெறும் இலக்கியங்களாக உருவெடுத்து வாழ்வியலின் சுவடுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

 

 

அந்தப் பாடலின் வழியே தங்கள் வாழ்க்கையின் சோகங்களையும், நிராகரிப்பையும், போராட்டங்களையும், கோபங்களையும், அன்பையும் காதலையும் என அனைத்து விதமான மனித வாழ்வின் உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வந்தன அந்த பாடல்கள். இன்றளவும் ஆங்காங்கே பெண்கள் நடவு நடும் போதும் பாடுவதை நம்மால் கேட்க முடியும்.

 

 

உலகமயமாக்கல் சூழலில் புலம்பெயர்ந்து செல்லும்போது பல பண்பாட்டு அடையாளங்களை மறந்து விட்டு விடுவதும், புதியதைப் பற்றிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் அடையாளங்களை கடைபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இதில் தீது, நன்று என இரண்டுமே உண்டு. ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் புகுந்து பூர்வக் குடிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதற்கு விவசாயமும் விதிவிலக்கல்ல என கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய நிலங்களில் வடநாட்டு விவசாயிகளை காண முடிகிறது.

 

'தன்னானே.. தானானே.. என ஒலித்த வயல்களில் 'கால பாஷ கவ்வா தேரே ஆங்கனே.. என என்ன மொழி என்றே தெரியாத பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  இதை பார்க்கும் பூர்வ குடிகளும் , சமூக ஆர்வலர்களும் 'இது எங்க போய் முடியுமோ..' என வருத்தம் தெரிவிக்கின்றனர்.