சிறு, குறு விவசாயிகளுக்கான வட்டாட்சியரின் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மதுரை தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்
தோட்டக்கலைத்துறையின் மூலம் சொட்டு நீர்ப்பாசனத்திற்கு மானியம்
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ், தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மனியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறையை பின்பற்றுவதால் 30 முதல் 40% வரை நீர் சேமிக்கப்படுகிறது. பாசன நீரானது தாவர வேரின் பக்கத்தில் மட்டும் செல்வதனால் களைகள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
ரூ.200 இலட்சம் ஆதி திராவிட இனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது
Fertigation முறையில் நீருடன் உரம் கலந்து செலுத்துவதால் உரத்திற்கான செலவு குறைவதுடன் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் தற்சமயம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதால் இம்முறையின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை கருத்தில் கொண்டு இவ்வாண்டு ரூ.1039 இலட்சம் மானியம் மதுரை மாவட்ட தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.200 இலட்சம் ஆதி திராவிட இனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், நிலம் பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
பயிரின் மகசூல் அதிகரிக்கும்
மேலும் இத்திட்டத்தின்கீழ் தானியங்கி நீர் பாசன அமைப்புகள் (Automation) அமைப்பதற்கு ஒரு எக்டருக்கு ரூ.20,000- மானியம் வழங்கப்படுகிறது. இதனை அமைப்பதன் மூலம் பயிர்களுக்கு சரியான நேரத்தில் பயிரின் அளவிற்கு தகுந்த நீர் வழங்கப்படுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் நேரம் மற்றும் உழைப்பை குறைக்கலாம், உரங்கள் மற்றும் நீர் சம நிலையில் வழங்கப்படுவதால் மண் சத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு பெறுவதற்கு குடும்ப அட்டையின் நகல், கணினி மூலம் பெறப்பட்ட சிட்டா, அடங்கல், நிலவரைபடம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான வட்டாட்சியரின் சான்று ஆகிய தேவையான ஆவணங்களை மதுரை தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் மற்றும் (http://tnhorticulture.tn.gov. in/) என்ற இணையத்தில் தாங்களே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.