தஞ்சாவூர்:  விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கூலிச்செலவு என பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நானோ யூரியா, நானோ டி.ஏ.பி. போன்ற உரங்களை ட்ரோன் மூலம் தெளிக்கும் முறை விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரம் தெளிக்க முடிவதுடன், செலவும் குறைவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளின் வயலில், இப்கோ நிறுவனம் சார்பில் நானோ உரங்கள் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நவீன விவசாயத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு நானோ உரம் தெளிக்கும் முறை விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. 

வயலின் மீது ட்ரோன் பறந்து சென்று சீரான முறையில் உரத்தைத் தெளிப்பதை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதுகுறித்து இப்கோ அதிகாரி எஸ்.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Continues below advertisement

தற்போது விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக ஆள் பற்றாக்குறை உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நெற்பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. தொழிலாளர்களை ஏற்பாடு செய்வது முதல் அவர்களுக்கு கூலி வழங்குவது வரை விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. ஒரு ஏக்கருக்கு உரம் தெளிக்கவே அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மாற்றாக ட்ரோன் மூலம் நானோ உரங்களை தெளிக்கும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மில்லி நானோ யூரியா போதுமானது. இதனை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கலாம். இந்த முறையில் வெறும் 10 நிமிடங்களில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உரம் தெளிக்கும் பணியை முடிக்க முடியும். அதேபோல் 10 ஏக்கர் பரப்பளவு இருந்தாலும் சுமார் 2 மணி நேரத்திற்குள் உரம் தெளிக்கும் பணியை நிறைவு செய்யலாம். இதனால் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும், நானோ உரங்கள் இலை வழியாக நேரடியாக பயிர்களுக்கு கிடைப்பதால், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், மகசூல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதேபோல் நானோ டி.ஏ.பி. உரத்தையும் ட்ரோன் மூலம் தெளிக்க முடியும். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது: நானும் இதற்கு முன்பு டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களை நேரடியாக மண்ணில் போட்டு வந்தேன். தற்போது நானோ உரங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மண்ணில் உரங்களை இடுவதைக் காட்டிலும் இலை வழியாக நானோ உரங்களை தெளிப்பதால் உரச் செலவு கணிசமாக குறைகிறது. ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்தின் விலை சுமார் ரூ.1,400 ஆக உள்ளது. ஆனால் நானோ டி.ஏ.பி. உரத்தின் விலை சுமார் ரூ.600 மட்டுமே. இதனால் உரம் வாங்குவதற்கான செலவிலும் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடிகிறது.

தற்போது நான் ஏ.டி.டி. 37 ரக நெல்லை சாகுபடி செய்துள்ளேன். இந்த சாகுபடியில் அடியுரமாக அரை மூட்டை டி.ஏ.பி. மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். அதன்பிறகு பயிர்களுக்கு தேவையான உரங்களை நானோ உரங்கள் மூலம் இலை வழியாக தெளித்து வருகிறேன். இதனால் உரச் செலவு குறைவதுடன், உரமிடும் பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது. முன்பு உரங்களை மண்ணில் இடுவதற்கு தொழிலாளர்களை தேடி அலைய வேண்டியிருந்தது. தற்போது விவசாய வேலைகளுக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. கிடைக்கும் தொழிலாளர்களுக்கும் அதிக கூலி வழங்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு ட்ரோன் தொழில்நுட்பம் நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் பணியை மேற்கொண்டபோது, வெறும் அரை மணி நேரத்தில் நாலரை ஏக்கர் நிலத்திற்கும் உரம் தெளித்து முடித்துவிட்டனர். இதே பணியை தொழிலாளர்களை வைத்து மேற்கொண்டால் குறைந்தது 4 பேர் தேவைப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.700 முதல் ரூ.750 வரை கூலி வழங்க வேண்டும். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட கூடுதல் செலவுகளும் ஏற்படும். காலை 9 மணிக்கு தொடங்கும் பணி மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை நீடிக்கும். ஆனால் ட்ரோன் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நாலரை ஏக்கருக்கு ரூ.2,000 முதல் ரூ.2,250 வரை செலவாகிறது. குறைந்த நேரத்தில் பணியும் முடிந்துவிடுகிறது.

ட்ரோன் பயன்படுத்துவதால் பணச்செலவு மட்டுமின்றி மன உளைச்சலும் குறைந்துள்ளது. தொழிலாளர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்று காத்திருக்க வேண்டியதில்லை. வெயில் அதிகமாக இருக்கிறதா, மழை வருமா என்று பார்த்துக்கொண்டு வேலைகளை தள்ளிப்போட வேண்டிய அவசியமும் இல்லை. போன் செய்தால் ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் பணிக்கு வந்து விடுகிறார்கள். சில மணி நேரங்களிலேயே பல ஏக்கர் நிலங்களில் உரம் தெளித்து முடித்துவிட முடிகிறது. இதனால் விவசாயப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள முடிகிறது என்றார்.

விவசாயத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் மாற்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரம் தெளிக்க முடிவதும், தொழிலாளர் கூலிச் செலவை கட்டுப்படுத்த முடிவதும் விவசாயிகளுக்கு கூடுதல் பலனாக அமைந்துள்ளது. சூரக்கோட்டையில் நடைபெற்ற இந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ட்ரோன் மூலம் நானோ உரம் தெளிக்கும் முறையை நேரில் பார்வையிட்டனர். நவீன தொழில்நுட்பத்தை தங்கள் வயல்களிலும் பயன்படுத்துவது குறித்து ஆர்வம் தெரிவித்தனர்.