தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. போதிய அளவு நீர் பாசன திட்டங்கள் இல்லாததால், வானம் பார்த்த பூமியாகவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மானாவரி பயிர்கள் அதிகமாக பயிரிட்டு வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி, கத்திரி, முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குண்டுமல்லி, சன்ன மல்லி, பட்டன் ரோஸ், அரளி, கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டுமல்லி என பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து, தருமபுரி மாவட்டத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோயமுத்தூர், ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். குறைந்த அளவு சாகுபடி செய்கின்ற சிறு விவசாயிகள் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் தினசரி பூ மார்க்கெட் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.



இந்நிலையில் தொப்பூர், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி,   உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர்.




இந்நிலையில் நன்றாக செழித்து வளர்ந்துள்ள குண்டுமல்லி செடிகளை செய்து கவாத் செய்து பராமரித்து வருகின்றனர். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் குண்டுமல்லி சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. குண்டு மல்லி சாகுபடி குறைவுக்கு காரணம், கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி அதிகம் போன்றவை தான். மேலும் குண்டுமல்லி செடிகளை நன்றாக பராமரிக்க வேண்டும். 


ஆனால் அதற்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. குண்டு மல்லி பூக்கள் பயிரிட்டு பராமரிப்பு பணி என ஏக்கருக்கு 50,000 வரை செலவாகும். ஆனால் பூக்களின் விலை 50 ரூபாய் 100 ரூபாய் என குறைந்த அளவிலே விற்பனையாகிறது. கோடை காலங்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் ஆனால் விலை இருக்காது. மேலும் இதனை அறுவடை செய்வதற்கு கூலி ஆட்களுக்கு கிலோவிற்கு 50 ரூபாய் கூலி தர வேண்டும். 


இந்த நிலையில் கோடை காலத்தில் விலை இல்லாததால்  நஷ்டம் ஏற்படும் என்பதால், கூலி ஆட்கள் இல்லாமல், குடும்பமாக பறிக்கும் அளவிற்கு குறைவாகவே சாகுபடி செய்து வருகின்றனர். ஆனாலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சுமார் ஒரு டன் வரை குண்டு குண்டுமல்லி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோடை காலத்தில் எல்லா பூக்களின் விலை உயர்ந்தாலும் மல்லிப் பூக்களின் விலை மட்டும்  உயராமலே இருந்து வருகிறது. இதனால் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் மட்டும் தினசரி ஒரு டன் அளவிற்கு பூக்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.