தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காவிரி ஆறு தண்ணீரின்றி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் காவிரி தண்ணீரை நம்பி பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, திருவலஞ்சுழி உட்பட பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தயார்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.


முப்போகம் சாகுபடி நடக்கும் தஞ்சை மாவட்டம்


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த பகுதிகளில் சம்பா,தாளடி, குறுவை என முப்போகம் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். பாசனத்திற்கு தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.


தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். கடந்த ஆண்டு வழக்கம் போல் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலையால் கும்பகோணம் வட்டாரத்தில் குறுவை சாகுபடியில் போதிய அளவு மகசூல் கிடைக்கவில்லை. கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் குறுவை பருவத்தில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.




பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம்


கும்பகோணம் கோட்டத்தை பொறுத்தவரை ஒரு பகுதியை சேர்ந்த விவசாயிகள் காவிரி தண்ணீரைக் கொண்டும், மற்றொரு பகுதி விவசாயிகள் பம்பு செட் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் குளம், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.


இந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை


இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணையில் நீர் குறைவாக உள்ளது. வழக்கம் போல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனில் நீர்மட்டம் 90 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 40 அடியாக உள்ளது. அதேபோல் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் வழக்கமாக ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. 


கால்நடைகள் மேயும் வயல்கள்


இதனால் டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையை நம்பி சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி தண்ணீரை நம்பி பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தயார்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
.
காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் கும்பகோணத்தில் நடக்கக்கூடிய கோவில் விழாக்களுக்கு புனித நீர் எடுப்பது, அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என அனைத்து நிகழ்வுகளுக்கும் பயன் பெற்று வந்தது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் ஆங்காங்கே சிறு குட்டை போல் தேங்கி கிடைக்கிறது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.