நெல் வயலில் மீன் சாகுபடி தமிழ்நாட்டிலும் சாத்தியம்!
 
மண் காப்போம் நெல் திருவிழாவில் அனுபவம் பகிர இருக்கும் முன்னோடி விவசாயிகள்


இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லை என்ற பொதுவான கருத்தை உடைக்கும் விதமாகவும், நெல் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் "பாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழாவை வேலூரில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்துகிறது. இதில் ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள். 



அதையொட்டி 'மீன் குட்டையில் நெல் சாகுபடி' எனும் புதுமையான கருத்தை தனித்துவமான சாகுபடி முறையால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் விவசாயி அன்பரசன். திருச்சி, பெல் பகுதி அருகே அமைந்துள்ளது இவரின் 7 ஏக்கர் பண்னை. கடந்த 9 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து வரும் இவருடைய நிலத்தில் மாப்பிளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கறுப்பு கவுனி உள்ளிட்ட பல பாரம்பரிய நெல் வகைகள் இருக்கின்றன.  மனிதர்களின் நல்வாழ்விற்கு நஞ்சில்லா விவசாயம் அவசியம் என்கிற நேர்மறையான சிந்தையோடு அவர் பேசத் தொடங்கினார்  


அமெரிக்காவில் பணியாற்றி பின்பு அந்த ஊரும் தொழிலும் வேண்டாம் என இந்தியா திரும்பியவர், ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். இவரிடம் சிறிதளவு நிலம் இருந்ததால் விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார். பின்னர் ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் சுபாஷ் பாலேக்கரின் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துள்ளார். அந்த வகுப்பு தான் தனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்றும், அந்த வகுப்பின் மூலமே நஞ்சில்லா விவசாயம் செய்ய வேண்டும் என இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியதாகவும் கூறுகிறார். 


“ஒரு தாவரம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? உள்ளிட்டவை எனக்கு தெரியும் என்றாலும் மண்ணுக்கு கீழுள்ள பல்லுயிர்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது குறித்த ஆழமான விபரங்களை ஈஷா விவசாய இயக்கம் நடத்திய பயிற்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன். மேலும் ஒரு விவசாயி தோல்வி அடையாத வகையில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறார்கள். அந்த தொழில்நுட்பங்களை  கற்றுக் கொண்டு என் நிலத்தில் செயல்படுத்தினேன்.” என்றார். 


அவரோடு நாம் பேசிய போது மீன் குட்டை ஒன்றை வெட்டி கொண்டிருந்தார். நெல் சாகுபடி நடுவே மீன் குட்டை வெட்டுவது ஏன்? என்ற நம் கேள்விக்கு, “5 அடியில் கரை கட்டி, ஒன்றே முக்கால் ஏக்கர் அளவில் குளம் வெட்டி வருகிறேன். வயலில் இருந்து 1 முதல் 1 முக்கால் அடி வரை மட்டும் தான் மண் எடுத்திருக்கிறேன்.  இதில் மீன் வளர்ப்பு செய்ய போகிறேன்.  இந்த குளத்திலேயே மீன் அமிலம், ஜீவாமிர்தம் எல்லாம் கலந்து விடுவேன். இதில் தேவையானவற்றை மீன்கள் எடுத்து கொள்ளும், மீதமிருப்பவற்றை நெல்லுக்கு பயன்படுத்தும் ஒரு முறையை நான் முயற்சித்து வருகிறேன். 


என் நிலம் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக இருக்க வேண்டும். “ஒருங்கிணைந்த” என்றால் ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு பயன் பட வேண்டும். உதாரணமாக, மீன்கள் வளர்ப்பதால் அமோனியா வாயு உருவாகும். இந்த வாயு நெல் பயிருக்கும், மற்ற தாவரங்களுக்கும் தேவைப்படும். எனவே, ஒரு போகம் மீன் அறுவடை செய்த பின்பாக அதே குளத்து நீரை வென்சூர் வழியாக வயலுக்கு தேவையான இடுபொருளை வழங்குவேன். அதன் பின்பு அதே நீரில் நெல் விவசாயம் செய்ய போகிறேன். 


மீன் அறுவடை முடிந்த பிறகு, 2 வருடத்திற்கு ஒரு முறை கீழே படிந்துள்ள மண்ணை நாம் அகற்ற வேண்டும். ஏனென்றால் மீன் வெளியிட்ட அமோனியா வாயு அந்த மண்ணில் இருக்கும். அந்த அமோனியா மீனை வளர விடாது. எனவே அந்த மண்ணில் நாம் நெல் சாகுபடி செய்தால் அந்த அமோனியாவை தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளும். இதன் மூலம் அமோனியாவை எளிதில் நீக்க முடியும், அதே அமோனியாவை நெல்லின் அபார வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். மேலும் அந்த மண்ணில் உழவு ஓட்ட வேண்டியதில்லை. அந்த குளத்தில் மீண்டும் நீர் நிரப்பும் போது அதிலுள்ள வைக்கோல் அழுகி மீண்டும் மீனுக்கே உரமாக மாறும். இப்படி என் நிலத்தில் எந்த பொருளும் வீணாகாமல் விவசாயம் செய்வதே என் நோக்கம்” என்றார். 


மேலும் தொடர்ந்த அவர், நான் என் நிலத்தில் விளையும்  நெல்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன். ஓராண்டுக்கு முன்பு “உழவன் அன்பு” என்ற இயற்கை அங்காடி தொடங்கியிருக்கிறேன். இங்கே நான் விளைவிக்கும் அரிசியை விற்பனை செய்கிறேன். என் வாழ்வாதாரத்திற்கு அது போதுமானதாக உள்ளது. மேலும் இயற்கையாக விளையும் பொருட்களை உண்ண வேண்டும் என பேசுவபவர்கள் 10% என்றால் அதை வாங்கி உண்பவர்கள் 2% தான். இந்த பயன்பாட்டாளர்கள் அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கும். 


விவசாயம் என்பது எல்லையற்றது. ஆரம்பத்தில் முல் முருங்கை செடி வைத்தேன். பின்பு பனை மரம் வைத்தேன், அதன் பின்பு நெல் விவசாயம் செய்ய தொடங்கினேன். இப்போது மீன் குளம் வெட்டுகிறேன். அதனை தொடர்ந்து ஈஷா பரிந்துரைக்கும் மரம் சார்ந்த விவசாயத்தை பின் பற்றி என் மீன் குட்டையின் வரப்பில் மரமும் நட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அந்த மரத்தில் மிளகை ஏற்றும் சாத்தியமும் உள்ளது.” எனவே தொடர்ந்து முயற்சித்து கொண்டேயிருப்பேன். என்றார் உற்சாகமாக. 


இவரைப் போலவே நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி திரு. பொன்னையா. இவர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பினால் 2 லட்சம் மற்றும் நெல் விவசாயத்தில் 60 ஆயிரம் என்றளவில் வருவாய் பார்க்கிறார். நெல் வயலில் மீன் வளர்ப்பின் மூலம் சீனா, தாய்லாந்து விவசாயிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் இவர் வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் உள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில்' சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்நிகழ்வில் தன்னுடைய வெற்றி அனுபவங்களை மற்ற விவசாயிகளும் பயன் பெறும் வகையில் பகிர இருக்கிறார். 


இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.