கோவில்பட்டி கோட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட மானாவாரி நிலங்களில் அறுவடை தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகால நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இந்தாண்டு செலவழித்த தொகையை எடுத்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோவில்பட்டி கோட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் புரட்டாசி பட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகள் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். அவற்றில் சின்ன வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனித்தும், ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளன.
ஏக்கருக்கு 70 கிலோ கொண்ட 10 பை விதை சின்ன வெங்காயம் ஊன்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் இருந்து போதிய மழை பெய்யாததால் வெங்காயத்தில் நண்டுக்கால், திருகல், அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது. உரிய மருந்து தெளித்தும் கட்டுப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும், வேலை ஆட்கள் கூலி அதிகரித்துவிட்டதால் செலவும் வரம்புக்கு மீறியது.
ஏக்கருக்கு களை பறிக்க ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கனமழை பெய்ததால் நிலத்தில் ஊன்றிய சின்ன வெங்காயத்தை கண்ணில் கூட காண முடியவில்லை. ஆனால், இந்தாண்டு அவ்வப்போது பெய்த மழையால் ஓரளவு வெங்காய சாகுபடிக்கு கைக்கொடுத்துள்ளது. தற்போது சாகுபடி செய்து 70 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் சில கிராமங்களில் வெங்காயம் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மகசூல் இல்லாத நிலையில், இந்தாண்டு சின்ன வெங்காயம் அறுவடையில் ஓரளவு பலன் கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது,கடந்த 2 ஆண்டுகளாக விதையாக ஊன்றிய சின்ன வெங்காய அளவு கூட மகசூலாக எடுக்க முடியவில்லை. தொடர் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் வெங்காய சாகுபடி பரப்பை பெருமளவு குறைத்துவிட்டனர். இந்த ஆண்டாவது செய்த செலவை ஓரளவு ஈடுகட்டிவிடலாமா என எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெங்காய பயிரிடப்பட்ட நிலங்களில் அறுவடை நடந்து வருகிறது. நல்ல திரட்சியான வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதே விலை அறுவடை முடியும் வரை நிரந்தரமாக இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றார்.