நெல் கொள்முதல் நிலையம் வருமா, வராதா காத்திருக்கும் விவசாயிகள்.


 


 




லாலாபேட்டை அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வாடகை இல்லாமல் இடம் கொடுத்தும் கொள்முதல் நிலையம் வருமா, வராதா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். கரூர் மாவட்டத்திலேயே அதிக அளவு விவசாயம் நடப்பது கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தான். அதிலும் லாலாபேட்டை சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி, மகிழப்பட்டி, புனவாசிப்பட்டி, கள்ள பள்ளி, பில்லா பாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, ஆகிய பகுதிகளில் தான் விவசாய பரப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் தான் அதிகளவு சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயம் அதிகம் உள்ள இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. தங்கள் பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து வந்தனர்.



இந்த ஆண்டும் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வீரராக்கியம், கோவக்குளம், மேட்டு மகாதானபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டது, ஆனால் வழக்கம் போல லாலாபேட்டை மிஸ்ஸிங் ஆனது. ஆண்டுதோறும் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை வாடகைக்கு வண்டி பிடித்து பக்கத்து ஊரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் விவசாயிகள் மலப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் விவசாய வயலுக்கு வரும் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். 'உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது' என்ற கணக்கில் ஆண்டுதோறும் சம்பா சாகுபடி செய்து கணக்கு பார்த்தால் நஷ்டமே ஏற்படுவதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி கணிசமாக குறைந்துள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையம் இருந்தால் நாலு காசு கிடைக்கும். ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் புலம்பி வந்தனர். இந்நிலையில் தங்கள் பகுதி விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயம் பெருக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் லாலாபேட்டை அடுத்த கொம்பாடி பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சீனிவாசா ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்முதல் நிலையத்திற்கு தேவையான இடத்தை வாடகை இல்லாமல் இலவசமாக வழங்க முன் வந்தனர். மேலும் கொள்முதல் நிலையத்திற்கு மின்சாரமும் இலவசமாக வழங்குவதாக தெரிவித்தனர்.


 




 


இதனைத் தொடர்ந்து மாவட்ட வாணிப கழக அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மூன்று ஏக்கர் அளவில் இடம் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் 
நிலையம் அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:


கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திலேயே லாலாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் தான் நெல் சாகுபடி அதிக அளவு நடந்து வருகிறது. ஆனால் இந்த பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில்லை. சாகுபடி செய்த நெல் மூட்டைகளை வண்டி பிடித்து பக்கத்து ஊரில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று காத்திருப்பதை விட, தனியாருக்கு 50 ரூபாய் குறைவாக இருந்தாலும், பரவாயில்லை என்று நிற்கிறோம். எங்களின் நிலையை கருத்தில் கொண்டு கொம்பாடி பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஓய்வு பெற்ற நீதிபதி குடும்பத்தினர் இடம், மின்சாரம் வழங்க முன் வந்துள்ளனர். ஆனால் தனியார் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விதிமுறை இல்லை என்று காரணம் காட்டி கொள்முதல் நிலையம் திறக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.


 




 


விவசாயம் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இடம் கொடுத்தாலும், ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிக்கும் செயல்தான் இது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றனர். இடமெல்லாம் சுத்தம் செய்யப்பட்ட நிலையில், இதோ திறந்து விடுவார்கள் என்று காத்திருக்கும் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையம் வரும், ஆனால் வராது என்று கணக்கு ஆகிவிட்டதாக புலம்பி வருகின்றனர்.