கூடுதல் கலெக்டர் வருவாய் சுகபுத்ரா தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளில் பெரும்பாலானோர் திருமண்டங்குடியில் தொடர்ந்து 31 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கைகளில் கரும்புகளை வைத்து கொண்டு கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கியில் ஆலை நிர்வாகம் கடன் வாங்கி மோசடி செய்ததால், விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் நிலுவை காணப்படுவதற்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் வெளிநடப்பு செய்த விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மதுக்கூர் சந்திரன்: பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள கீழக்குறிச்சி, பெரியகோட்டை, சிரமேல்குடி, அத்திவெட்டி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் நெற் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் உடன் திறக்க வேண்டும்.

கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா: மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: வேளாண் துறை மூலம் கடலை விதையை மானியத்தில் வழங்க வேண்டும். அல்லது தனியாரிடம் வாங்கப்பட்ட கடலை விதைக்கு ரசீது கொடுப்பதன் மூலம் பணம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் ஆலைக்கழிவு நீர் குளத்தில் வந்து தேங்கியதால் மீன்கள் செத்து விட்டன. இந்த தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் பாசனம் பெறும் ராயமுண்டான்பட்டி நெப்பி ஏரிக்குச் செல்லும் பாசன வாய்க்கால் குமுலி உடைந்து, சிதிலமடைந்துவிட்டது. இதனால், ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு சிரமமாக உள்ளதால், குமுலியைச் சீரமைக்க வேண்டும்.ஆம்பலாப்பட்டு தங்கவேல்: விதை கடலை விலை தனியாரிடம் அதிகமாக உள்ளது. மேலும் உயிரற்ற விதைகளாக உள்ளதால், விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி உயிரற்ற விதைகள் விற்பனை தடுக்க வேண்டும்.


 

கோனேரிராஜபுரம் வீர ராஜேந்திரன்: தஞ்சை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக பயிர் கடன் வழங்கப்படுகிறது. இது 8 மாதம் வட்டியில்லா கடனாக வழங்கப்படுகிறது. இதன் கால அளவை ராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்ணயம் செய்துள்ளது போல் நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பேட்டை கே. முகம்மது இப்ராஹிம்: பாபநாசம் வட்டத்தில் 30 கிராமங்களில் அச்சு வெல்லம் தயாரிக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு கூடுதல் விலைக்கு வெல்லத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பேசுகையில், பட்டா மாறுதல் கேட்டு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் இருந்தது. இதற்காக "மிஷன் தஞ்சாவூர்" என்ற திட்டம் வகுக்கப்பட்டு பிரத்யேகமாக நில அளவையர்கள் கொண்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. தற்போது 5,700 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இதையும் விரைந்து முடிக்க விஏஓக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்தில் அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்படும். வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சான்றுகளும் 15 தினங்களுக்குள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான அம்மை நோயை தடுக்க தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றார்.


இதில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை மற்றும் பலர் கலந்து கொண்டனர்,