விவசாயத்தை அதிகரிக்க அரசின் திட்டங்கள்

விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் நிதி உதவி அளிக்கப்படுகிறது.இதன் மூலம் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இயற்கை பேரழிவுகள், பூச்சி தாக்குதல்கள் போன்றவற்றால் ஏற்படும் பயிர் இழப்புக்கும் காப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்  3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டும் வழங்கப்படுகிறது.

Continues below advertisement

விவசாயிகளுக்கு 50% மானியம்

இந்த நிலையில் விவசாயத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், வேளாண்மை இயந்திரங்கள் வாங்க அசத்தலான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம் என்ற சிறப்பு திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை வாங்க 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இயந்திரம் விலை 50ஆயிரம் ரூபாயாக இருந்தால் அதில் 25ஆயிரம் ரூபாய் மானியமாக அரசே வழங்கும். இதே போல பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படுகிறது.

மற்ற விவசாயிகள் வேளாண்மை இயந்திரங்கள் வாங்க 40% மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களுக்கான வாடகை மையம் அமைக்கவும் 80% அளவிற்கு மானியம் அளிக்கப்படவுள்ளது. 

Continues below advertisement

எந்த இயந்திரங்களுக்கெல்லாம் மானியம் கிடைக்கும்

  • டிராக்டர்கள்
  • களையெடுக்கும் கருவிகள் 
  • கதிரடிக்கும் இயந்திரங்கள் 
  • பவர் டில்லர்கள் 
  • நெல் நடவு இயந்திரங்கள் 
  • கரும்பு சோகை அரைக்கும் கருவிகள் 
  • தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் 
  • மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான மாவு அரைக்கும் இயந்திரம் 
  • எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு 

மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், மொபைல் போனில்  'உழவன்' செயலியை (Uzhavan App) பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரம் ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை, 
  • வங்கி கணக்கு புத்தகம், 
  • நிலத்தின் சிட்டா, பட்டா 
  • புகைப்படம்