விழுப்புரம்: தனியார் உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உர மூட்டைகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை.

Continues below advertisement


அனுமதி பெறாத இடங்களில் உர மூட்டைகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உர மூட்டைகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பாவது.


விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மற்றும் உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள இதர பயிர்களுக்கும் தேவையான யூரியா 2687 மெ.டன், டிஏபி 1400 மெ.டன், பொட்டாஷ் 1158 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5804 மெ.டன், சூப்பர் 1826 மெ.டன் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி உரமிடுவதனால் உரச்செலவை குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்பொழுது இரண்டு, மூன்று தடவைகளாக பிரித்து இட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்பிற்கு அதிகபட்சமாக 26 கிலோவிற்கு மேல் நெற்பயிருக்கு இடக்கூடாது. அதிகமாக இடும்பொழுது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிர் சாய்வதற்கும் வழிவகுக்கின்றன.


உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.


உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை


ஒரே விவசாயியின் பெயரில் தேவைக்கு அதிகமாக விற்பனை செய்வது, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்வது ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரங்கள் அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது.


மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது.


மேலும், தொடர்ந்து வட்டார அளவில் ஆய்வின்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.