திண்டுக்கல் சிறுமலைப்பகுதியில் இடைத்தரகர்களால் அழிந்து வரும் காபி விவசாயத்தை மீட்டு, தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை புதூர் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவதில், காபி கொட்டைகள் பயிரிடுதலும் ஒன்றாகும் இப்பகுதியில் 20,000  ஏக்கருக்கும் மேலாக காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் காப்பி, வாழை, பலா, எலுமிச்சை, மிளகு போன்றவற்றை முக்கிய பயிர்களாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காபி விவசாயம் விளங்குகிறது.



காபியில் சந்திரகிரி, எஸ் பை 9, எஸ் பை 5, ரோபாஸ்டர், செலக்சன், குட்டக்காபி போன்ற பல வகைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் அதிகபட்சமாக செயற்கை முறையைத் தவிர்த்து இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகின்றனர். இதனால் அதிக செலவு பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தங்களிடம் கிலோ 60 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் வாங்குவதாகவும் எனவே வருமானம் குறைந்த அளவே கிடைக்கின்றது எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.



தண்டுதுளைப்பான், ஸ்டெம்போரர், பெரிபோரர் போன்ற நோய்களால் காப்பி இதிக அளவில் பாதிப்படைவதாகவும் கூறுகின்றனர். இதனால் காபி பயிரிடும் விவசாயிகள் காபி பயிரிடுவதும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் முற்றிலுமாக காபி விவசாயம் அழிந்துவிடும். எனவே இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  மேலும், 10 வருடங்களுக்கு முன்பு அரசாங்கம் அதற்கென தனி டிப்போ வைத்து காப்பி கொள்முதல் செய்தது அதனால் அதிக அளவு இலாபம் கிடைத்ததாகவும், தீபாவளி போனஸ், வேலையாட்கள் கூலி போன்றவை சரிசமமாக வழங்கப்பட்டதாகவும் தற்பொழுது இடைத்தரகர்கள் அதிகமாகிவிட்டதால் போதுமான அளவு இலாபம் கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர் .



காபி உரிமையாளர்களிடம் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோருக்கு  அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகள் காபி அறுவடைக்கு பின் தேவையான இயந்திர வசதிகள் இல்லை எனவும் குறிப்பாக காபி அறவைக்கு தேவையான அறவை மெசின், காயவைக்க தேவையான களம்,பல்பர் போன்ற முக்கிய வசிதிகள் இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து அரசாங்கம் தங்களுக்கு போதுமான வசதி செய்து தரும்படியும், மீண்டும் அரசு டிப்போ அமைத்து தங்களுக்கு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பின்பு, காப்பித் தூளாக மாற்றுவதற்காக பச்சையான காபிக்கொட்டைகள் வறுப்பதற்காகவும், வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகளை நன்கு தூளாக அரைப்பதற்கும் பல்வேறு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் பின்பு அரைக்கப்பட்ட காபி தூளைச் சில்லரைகளாகவும் மொத்தமாகவும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.