தர்மபுரி மாவட்டத்தில் கொளுத்தும் அனல் காற்றால் வெற்றிலை மற்றும் வெற்றிலை கொடி கால் முற்றிலும் கருகியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் பெற்று தர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தமிழகத்தில் தூத்துக்குடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெற்றிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் முக்கல்நாயக்கன்பட்டி, நூல அள்ளி, மிட்டாரெட்டிஹல்லி, தின்னஹல்லி நடுப்பட்டி, அக்குமானஹல்லி, கோடியூர், பாளையம்புதூர், கோம்பை, நார்த்தம்பட்டி, ஜாலி கொட்டாய், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வெள்ளை மற்றும் கருப்பு ரக வெற்றிலைகள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை சேலம், ஈரோடு, கோவை, பவானி உள்ளிட்ட இடங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  தர்மபுரி மாவட்ட வெற்றிலைக்கு ஈரோடு, சேலம் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.  ஒரு கட்டு 150 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. 


கடந்த இரு வாரத்திற்கு முன்பு ஒரு மூட்டை வெற்றிலை 19,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வெற்றிலை விலை உயர்ந்து ஒரு மூட்டை வெற்றிலை 25,000 வரை விற்பனையானது. இரண்டு வாரத்தில் வரத்து குறைந்ததால், வெற்றிலை மூட்டைக்கு 6000 விலை உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் கோடை வெயிலில், அனல் காற்றிலும் கிணறு மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல், வெற்றிலை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, தற்போது வெற்றிலை அறுவடை செய்து வருகின்றனர்.  மேலும் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை, இப்போது அறுவடை செய்யப்படுகிறது. ஆனாலும் பல இடங்களில் கிணற்றில் தண்ணீர் இல்லை.


இதனால் வெற்றிலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் காய்ந்து கருகியது.  இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டும் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது. பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை. கொளுத்தும் வெயிலுக்கு வெற்றிலை மற்றும் வெற்றிலை கொடிக்கால் காய்ந்து கருகுயுள்ளது.  இது போன்று உருவாக்க மூன்று மாதங்கள் ஆகும். வெற்றிலை பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. அந்த காம்புகளை வெட்டி பதியம் போட்டுத்தான், பயிர் செய்யப்படுகிறது. வெற்றிலை கொடிக்கு அதிக வளிமண்டல ஈரப்பதம் கொண்ட வெப்ப மண்டல காலநிலை தேவைப்படுகிறது. நீர் தேங்கியுள்ள உலர் நிலம் மற்றும் களிமண் அதன் சாகுபடிக்கு ஏற்றதாகும். அனல் காற்றால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பெரும்பாலான வெற்றிலைக் கொடிகள் நீரின்றி காய்ந்து கருகியதால், பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் பெற்று தர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.