தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள போஸ்டல் காலனியில் மொட்டை மாடியை தோட்டமாக மாற்றி அசத்தி உள்ளார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை சகாய மேரி லீலா.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் சந்திரமௌலி. இவர் தஞ்சை மானோஜிப்பட்டியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். சமீபத்தில் கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து ஒளிரும் ஆசிரியர் விருது பெற்றவர் இவர். மகன் அருண்மணி எம்.பி.ஏ. பட்டதாரி.

மாடித் தோட்டம் அமைத்து காய்கறிச் செடிகள், மூலிகைகளின் “அம்மா”வாக உலா வருகிறார் சகாயமேரி லீமா என்றால் மிகையில்லை. பிரமாண்ட தோட்டமாக அமைத்துள்ள தனது மாடித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று நம்மிடையே பேசத் தொடங்கினார்.

 

அவர் கூறியதிலிருந்து...

கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கியது மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம். அதற்கு எனது கணவர் சந்திரமௌலி உற்சாகம் கொடுத்தார். எங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க முடிவு செய்து அதுகுறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். காய்கறிகள் மட்டும் இல்லாமல் நோயற்ற வாழ்வு வாழ்வதே சிறந்தது என்பதால் மூலிகைகளும் வைக்க யோசனை வந்தது. எனது யோசனையை தனது ஆலோசனையால் சரி என்று தெரிவித்தார் எனது கணவர். மகனும் கைக் கொடுக்க முழுக்க முழுக்க இயற்கையுடன் இணைந்த தோட்டமாக இதை தொடங்கினேன்.

என் மகன் படிப்புக்காக வெளியூரில் தங்கி உள்ளார். நான் விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். காலையிலிருந்து மாலை வரை வீட்டிலேயே எத்தனை நேரம்தான் சும்மா இருப்பது. அப்போது தோன்றிய யோசனைதான் இன்று இத்தனை குழந்தைகள் என்னை சுற்றி இருக்க காரணமாக அமைந்தது. நான் குழந்தைகள் என்று சொல்வது நான் வளர்க்கும் காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகளைதான். வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். நம் வீட்டு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே டாக்டரை பார்க்க அழைத்துச் செல்வோம். அதுபோல்தான் உயிருள்ள, ஆனால் பேசத் தெரியாத குழந்தைகள்தான் செடிகளும், மரங்களும், கொடிகளும் என்றால் மிகையில்லைங்க.



என் மாடி வீட்டு தோட்டத்தில் ரோஜா, மல்லிகை, மதுரை மல்லி, சந்தன முல்லை, ரெட் ரோஸ், ஒயிட் ரோஸ், பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் என்று மணம் வீசும் செடிகள் இருக்கிறது. கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தவரை, அவரைக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய், மோர் மிளகாய் என்று காய்கறி ரகங்களும் இருக்கிறது. இவை வளர்ந்து காய்க்க ஆரம்பித்ததில் இருந்து எங்கள் வீட்டு சமையலுக்கு வெளியில் இருந்து காய்கறிகளே வாங்குவதில்லை. மனம் போல் மகிழ்ந்து காய்த்து தள்ளுகின்றன. என் வீட்டு தோட்டத்திற்கு எவ்வித ரசாயன உரங்களும் தெளிப்பதில்லை.

மண்புழு உரம், காய்கறி தோல் இவை அடியுரமாக போடுகிறேன். காய்கறி கழிவுகளை நன்கு அரைத்து காயவைத்து பொடியாக்கி செடிகளுக்கு இடுகிறேன். இது காய்கறி செடிகளுக்கு மட்டுமில்லை. நான் வளர்க்கும் அனைத்து செடிகளுக்கும் இதுபோன்று காய்கறி கழிவுகளை அரைத்து பவுடராக்கி தூவுகிறேன். என் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வைத்து கொண்டு மற்ற காய்கறிகளை எங்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் கொடுத்து விடுகிறேன். இயற்கை உரத்தால் காய்த்த காய்கறிகள் என்பதால் சாம்பாராக இருந்தாலும் சரி, பொறியலாக இருந்தாலும் சரி ருசி பிரமாதமாக இருக்கும்.

மாதம் ஒருமுறை இயற்கை கழிவுகள் அதாவது மக்கிய செடி, கொடி இலைகள், காய்கறி தோல், மோர், புளிச்ச இட்லி மாவு என அனைத்தையும் அடியுரமாக்கி தெளிப்பதால் பூச்சித் தாக்குதல் ஏற்படுவதே இல்லை. அவ்வபோது வேப்ப இலையை அரைத்து அதையும் தெளிப்பதால் செடிகள் அருமையாக வளர்கின்றன. மேலும் பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, சக்கரவர்த்தி கீரை, மணத்தக்காளி கீரை என்று கீரை வகைகளும் பயிரிட்டு பறித்து தினம் ஒரு கீரை என்று சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறோம்.

மாடித் தோட்டம் என்றால் காய்கறிகள், பூச்செடிகள், கீரை அப்படின்னுதான் எல்லோரும் நினைப்பாங்க. ஆனால் எங்க வீட்டு மாடித் தோட்டத்தில் இஞ்சி, சித்தரத்தை, வெற்றிலை, திப்பிலி, துளசி, ஓமவல்லி, முடக்கத்தான், வாதாமடக்கி, பல்குத்தி, குறிஞ்சான், ரணகள்ளி, லெமன்கிராஸ் (எலுமிச்சை புல்) சோற்றுகற்றாழைன்னு மூலிகைகளும் வளர்த்துக்கிட்டு இருக்கோம். கொரோனா காலக்கட்டத்தில் இந்த மூலிகைகள் எங்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்தது.

காய்ச்சலாக இருந்தாலும் சரி, சளிப்பிடித்தாலும் சரி எங்கள் தோட்டத்தில் உள்ள மூலிகைகளை பறித்து கசாயம் வைத்து குடித்தோம். அருமையான ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் எங்களுக்கு கொடுத்தது. ஓசூரில் இருந்து சம்பங்கி, அடுக்கு சம்பங்கி கிழங்கு வாங்கி வந்து பதியன் போட்டு வளர்த்தோம், இங்க பாருங்க எவ்வளவு பூக்கள் பூத்திருக்கு என்று என்று நம்மிடம் காட்டினார். அடர்த்தியாக தொட்டியில் வைத்து வளர்க்கப்பட்ட சம்பங்கி பூத்து குலுங்கி சகாயமேரி லீமா சொல்வது உண்மை என்பதுபோல் தலையசைத்தன.

இதுமட்டுமில்லை. வெள்ளை மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள்) வளர்த்து நிறைய பறித்து உள்ளேன். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துள்ளேன். காலை, மாலையில் செடி, கொடிகள், மூலிகைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது எனது மனதிற்கும், ஆரோக்கியத்திற்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது ஏதாவது ஒரு செடியோ, கொடியோ வாடிக்கிடந்ததால் என்னப்பா ஆச்சு... உனக்கு என்னாச்சு என்று குழந்தையிடம் கேட்பது போல் கேட்பேன். இந்த செடிகள் அனைத்துமே என் குழந்தைகள்தான் என்று கண்களை விரித்து நெகிழ்ச்சியாக கூறினார். அவர் மேலும் தொடர்ந்து இசை கேட்டால் செடிகள் வளரும் என்பார்கள். நான் இந்த செடிகள் அனைத்திடமும் காலையும், மாலையும் பேசிக் கொண்டு இருப்பேன். இவை நான் பேசுவதை கேட்டு தலையசைப்பது போன்று எனக்கு தோன்றும். மனம் லேசாகி காற்றில் பறக்கும். எந்த ஊருக்கு சென்றாலும் நிச்சயம் அங்கிருந்து ஒரு செடி வாங்கி வந்து விடுவேன்.

இந்த மாடித் தோட்டத்தில் மேலும் செடிகள் வளர்க்க எனது வீட்டில் குடியிருக்கும் கல்லூரி விரிவுரையாளர் திருமகள் பெரும் உதவியாக இருக்கிறார். அவரும் மாலை நேரத்தில் இங்கு வந்து உதவிகள் செய்வார். இப்படி எங்கள் வீட்டு மாடித் தோட்டம் எங்களுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கு. இவரது மாடித் தோட்டத்தில் உள்ள மற்றொரு ஹைலைட்டான விஷயம்.


சிட்டுக்குருவிகள், மைனா, தவிட்டு குருவிகள் குளிப்பதற்காகவும், தண்ணீர் குடிப்பதற்காகவும் சிறிய அளவிலான சிமெண்ட் வளையம் வைத்துள்ளார். தினமும் காலை, மாலை வேளையில் அதில் பழைய தண்ணீரை மாற்றி விட்டு புது தண்ணீரை நிரப்புகிறார். காலை, மாலையில் எங்கிருந்துதான் வருமோ தெரியவில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குருவிகள், தவிட்டுக்குருவிகள் வந்து குளியலாடுகின்றன. அதுமட்டுமா இவற்றுக்காக சகாய மேரி லீமா வைக்கும் உணவுகளையும் உண்டு தோட்டத்தை வலம் வந்து அமர்ந்து பின்னர் பறக்கின்றன. இயற்கை கொடுத்த அற்புதமான விஷயம் இரக்கம். அதை செடிகளிடமும், குருவிகளிடம் காட்டி உயர்ந்து நிற்கிறார் சகாயமேரி லீமா.