தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கோட்டாட்சியர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு, பயிர் சாகுபடி விபரம் மற்றும் வேளாண்மை திட்டங்கள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம் பேசினார்.




தொடர்ந்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலைத்துறை இணை பேராசிரியர் மணிவண்னன் பேசும்போது, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் பனை மரம் குறித்து நடைபெறும் ஆராய்ச்சிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார். குட்டை பனைமரங்களை உருவாக்குவதற்காக நடைபெறும் ஆய்வுகள் மற்றும் பனையேறும் கருவியை உருவாக்குவதற்கான ஆய்வுகளின் தற்போதைய நிலையை விளக்கினார்.




மேலும், பதனீரை 15 முதல் 20 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கான நுண்ணுயிர் வடிகட்டும் கருவி, பனம்பழ கூழ் தயாரிக்கும் செய்முறை, கருப்பட்டி தயாரிக்கும் இயந்திரம், பனைத் தேன் தயாரிக்கும் இயந்திரம் போன்ற வேளாண் கல்லூரி சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும், மதிப்புக்கூட்டிய பனைப் பொருட்களான நுங்கு மிட்டாய், நுங்கு ஜாம், பனங்கிழங்கு பவுடர் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு  அவர் விளக்கம் அளித்தார்.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசும்போது, "பனங்கருப்படி, கற்கண்டு மற்றும் பனை பொருட்கள் தயாரிப்பு தொழில் செய்ய விரும்புவோருக்கு பிரதம மந்திரி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை 35 சதவீத மானியத்தில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


புளியம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற விவசாயி பேசும்போது, "2021- 2022-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், ரூ.1500 முதல் ரூ.2000 மட்டுமே இழப்பீடு வந்துள்ளது. எனவே, முழுமையான இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர். இதற்கு பதிலளித்த வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம், அந்தந்த பகுதி பயிர் மகசூல் கணக்கெடுப்பு படி தான் இழப்பீடு வழங்கப்படுகிறது" என விளக்கமளித்தார்.


எட்டயபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, "2020- 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்கள் குறைகளை நேரில் சென்று தெரிவித்து தீர்வு காணும் வகையில் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகம் மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் இடம் பெற வேண்டும். 2022- 2023 ராபி பருவத்தில் மழை இல்லாததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் மகசூல் கணக்கெடுப்பில் விவசாயிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார் அவர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.




மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும் போது, "கிராமங்களின் ஒதுக்குப்புறங்களில் உள்ள கண்மாய்களில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களுக்குள் பன்றிகள் கூட்டமாக தங்கியுள்ளன. அவைகளை ஒழிக்க முதலில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கூடி கண்மாயக்ள், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான செயல்திட்டத்தை 1 மாதத்துக்குள் தயாரிக்க வேண்டும். அவ்வாறு செயல்திட்டம் வகுத்தால் தான், அடுத்த நிதியாண்டில் உரிய நிதி ஒதுக்கீட்டை பெற்று வரும் ஏப்ரல், மே மாதங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியும். முதலில் வனத்துறை மூலம் சீமைக்கருவேல மரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அதிக மதிப்பு இருந்தால் ஏலம் விட வேண்டும். இல்லையெனில் ஊராட்சிகள் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அகற்ற வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டால் பன்றிகளை பிடிப்பது எளிதாக இருக்கும். இந்த பணிக்கு விவசாயிகளும், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.