தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன், பாரம்பரிய விவசாயத்தை குடும்பத்தை சேர்ந்தவர். பாலக்கோட்டில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக  தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் சோளம், கேழ்வரகு, நெல், கம்பு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். ஆனால் எந்த பயிர் செய்தாலும் போதிய வருவாய் இல்லாமல், மிகுந்த நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார்.  இதனால் புதுமையான பயிர்களை தேர்வு செய்து, பயிரிடும் என எண்ணியுள்ளார். அப்பொழுது ஓசூர் சென்றபோது, உறவினர் ஒருவர் பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர் சரவணன், பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்யும் முறை குறித்து கேட்டறிந்துள்ளார். ஆனால் இந்த பயிர் குளிர் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யமுடியும். தருமபுரி போன்ற வறட்சியான, தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வராது என தெரிவித்துள்ளனர்.



 

ஆனால் ஆர்வத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு பன்னீர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில், சிவப்பு, பச்சை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பன்னீர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்த்து வந்துள்ளார். பன்னீர் ஆப்பிள் செடி வளர்ந்த இரண்டு வருடங்களிலேயே மகசூல் பிடித்தது. இது ஆண்டு  அறுவடைக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. இந்த பன்னீர் ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ளதால், ஜீரண கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குணப்படுத்தும், கர்ப்பிணிகள் உண்பதால், சுக பிரசவம் நடைபெறும். இதுபோன்ற  மருத்தவ குணம் கொண்டதால், மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தோட்டத்திற்கே வந்து  வியாபாரிகள் பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வதால் விற்பனை வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. 



 

இதில் சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான பன்னீர் ஆப்பிள் விலை ஐம்பது ரூபாய், மற்ற ரகங்கள் ரூ.70 முதல் 100 விற்பனையாகிறது. ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கையோடு தெரிவி்க்கிறார்.  மேலும் இந்த பன்னீர் ஆப்பிள் சாகுபடிக்கு பராமரிப்பு மற்றும் கூலியாட்கள் தேவை முற்றிலுமாக இல்லை. இதனை கணவன், மனைவி இருவரே பராமரித்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் இவர்களே பன்னீர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய பன்னீர் ஆப்பிள் வறட்சியான தருமபுரி மாவட்டத்திலும் நன்கு வளர்ந்து லாபம் கொடுக்கிறது.  இதரால் கூலியாட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் நஷ்டம் சந்தித்து வரும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை தெரியப்படுத்தினால், விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.