மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் ஏப்ரல், மே மாதங்களில் விதைவிட்டு நடவுசெய்த குறுவை பயிர்கள் தற்போது அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று மேட்டூர் அணையிலும் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக பாசனத்திற்கு முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் கதிர்கள் வந்து முற்றும் தருவாயில் இருந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் தற்போது மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் கதிர்பாதி முற்றிய நிலையில் இருக்கும் பயிர்களும் வயலில் சாயத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பயிர் பாதிப்புகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, வேளாண்மை இணை இயக்குனர் சேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் புத்தகரம், திருவாளப்புத்தூர் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்து தண்ணீரில் சாய்ந்து முளைத்த குறுவை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தினந்தோறும் மழைபெய்வதால் கதிர்முற்றிய பயிர்கள் வயலில் சாய்ந்ததால் மழைநீரை வடிகட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் ஊறும் நெற்கதிர்கள் முளைத்து நாற்றாக மாறிவிட்டது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு அறிவிக்கப்படாததால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
காவிரியில் உபரி நீர் திறப்பால் பாழான பயிர் வகைகள்!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி வெள்ள நீர் தமிழ்நாட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி வெள்ள நீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பழைய ஆறு என்ற இடத்தில் கடலில் கலந்து வருகிறது. அணைக்கரையிலிருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாதல்ப்படுகை, முதலை மேடு, வெள்ளை மணல் உள்ளிட்ட இடங்களில் படுகை கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், இப்பகுதியில் பயிரிட்டுள்ள தோட்ட பயிர்களான, வெண்டை, கத்தரி, முல்லை, கீரை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி பாழாகி உள்ளது. இதேபோன்று கொள்ளிட கரைக்கு அப்பால் உள்ள ஆச்சாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், பழுதடைந்த நீர் ஒழுங்கி சட்ரஸ் வழியாக காவிரி ஆற்று நீர் உட்பகுர்ந்து 5000 ஏக்கருக்கு மேல், நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்துள்ளனர். இதனால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் நஷ்டத்தை போக்க அரசு உடனடியாக இப்பகுதிகளில் பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.