Bhavina Patel : முடக்கிய போலியோ..சாதித்த பவினா..பாரா ஒலிம்பிக்கில் வென்று காட்டிய கதை !

Continues below advertisement

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் பங்கேற்றார். இந்தப் பிரிவில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவினா பட்டேல் உலக தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் உள்ள 4 வீராங்கனைகளை தோற்கடித்தார். அத்துடன் காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியன் மற்றும் அரையிறுதியில் உலக தரவரிசையில் 3ஆம் நிலை வீராங்கனையான மியாவை தோற்கடித்தார்.

இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பாராலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை பவினா பட்டேல் தான். இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஷியோவை பவினா பட்டேல் எதிர்கொண்டார். ஷியோவ் இடம் ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக் குரூப் போட்டியில் பவினா பட்டேல் தோல்வி அடைந்து இருந்தார்.

இதனால் அந்த தோல்விக்கு இறுதிப் போட்டியில் பழிவாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியின் முதல் கேமில் இரு வீராங்கனைகளும் நன்றாக தொடங்கினர். சீன வீராங்கனை ஷியோ யிங் 11-7 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் ஷியோ யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த கேமை 11-5 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இதனால் மூன்றாவது கேமை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பவினா பட்டேல் தள்ளப்பட்டார். மூன்றாவது கேமின் தொடக்கத்தில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இறுதியில் மூன்றாவது போட்டியை 11-6 என்ற கணக்கில் ஷியோ யிங் வென்றார்.

அத்துடன் ஷியோ யிங் 11-7,11-5,11-6 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பவினா பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தேசிய விளையாட்டு தினமான இன்று டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பவினா வென்று அசத்தியுள்ளார். ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வென்று இருந்தார். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆகிய இரண்டிலும் இம்முறை இந்தியாவின் முதல் பதக்கத்தை வீராங்கனைகளே வென்று அசத்தியுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram