Sreejesh hockey Player | ஹாக்கி அணியின் தடுப்புச்சுவர் பாகுபாலியாக மாறிய ஸ்ரீஜேஷ்கேரள சேட்டனின் கதை!
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியை நாடே கொண்டாடி வரும் இந்த சூழலில் இதற்கு முக்கிய பங்காற்றிய இந்திய அணியின் கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இவரது முழுப்பெயர் பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ். கேரளம் மாநிலம் கொச்சியில் 1988 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பிஆர் ஸ்ரீஜேஷ் முதன் முதலில் விளையாடத்தொடங்கியது நீளம் தாண்டுதல் தான். அதனைத்தொடர்ந்து வாலிபால் மீது ஆர்வம் ஏற்பட அதை முழு நேரமாக விளையாட ஆரம்பித்து இருக்கிறார். வாலிபால் சிறப்பாக விளையாடினாலும் மைதானத்தில் இவரைக்கண்ட ஹாக்கி பயிற்சியாளர் ஒருவர் நீ ஏன் ஹாக்கி விளையாடக்கூடாது? என்று கேள்வியை எழுப்ப இவரும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ்.தோனி பள்ளிப்பருவத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது எப்படி அவரை கிரிக்கெட்டில் கீப்பராக வந்து விளையாடுகிறாயா? என்று பள்ளியின் பிடி ஆசிரியர் கேட்டாரோ அதைப் போலத்தான் ஸ்ரீஜேஷ் வாழ்விலும் நடந்துள்ளது.
பயிற்சியாளரின் சொல்படி ஹாக்கி விளையாட்டில் தொடர்ந்து பல்வேறுவிதமான பயிற்சிகளை மேற்கொண்டு பள்ளி மற்றும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய 18வது வயதில் இந்திய ஹாக்கி அணியில் ஸ்ரீஜேஷுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்திய அணியில் முறையான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சமயம் அது. ஐந்து வருடங்களாக நிலையான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பராக விளையாடினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ராகுல் டிராவிட் ஒரு தடுப்புச் சுவர் போல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு பாடுபட்டாரோ அதைப்போல் ஸ்ரீஜேஷ் ஹாக்கி அணியின் டிராவிட் என்ற பெயரையும் பெற்றார். இவரைத்தாண்டி மாற்று அணி வீரர்கள் கோல் கம்பத்திற்குள் கோல் அடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதாவது இந்திய அணியின் மற்ற வீரர்கள் எல்லாம் சேர்ந்து அடித்த கோல்களை விட ஸ்ரீஜேஷ் தனி ஒரு ஆளாக நின்று தடுத்த கோல்கள் தான் அதிகம். இப்படி இந்திய அணியின் தடுப்புச் சுவராக இருந்த இவரை தேடி 2016 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பு வந்தது. அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதே ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியை கால் இறுதி சுற்று வரை அழைத்து வந்தார். இறுதி போட்டிக்கு செல்ல முடியாத வருத்தத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
ஆனாலும் போர் கண்ட சிங்கம் போல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டார். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் ஜெர்மனிக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் கடைசி நிமிடத்தில் இவர் தடுத்த அந்த கோலால் தான் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது.
இப்படி இந்திய ஹாக்கி அணி எப்போதெல்லாம் வலிமை இழந்து நிற்கிறதோ அப்போதெல்லாம் நான் இருக்கிறேன் என்பதைப் போல் தனி ஒரு ஆளாக நின்று இந்திய அணியை (இந்தியாவை) தாங்கிப்பிடித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஜாம்பவானுக்கு கேல் ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 2022 காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம், 2022 ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம், 2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் என பல்வேறு முக்கியமான போட்டிகளில் தான் யார் என்பதை நிறுப்பித்திருக்கிறார் ஸ்ரீஜேஷ்.
இச்சூழலில் தான் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு முன்னதாக தனது ஓய்வை அறிவித்தார். அதன்படி பாரீஸ் ஒலிம்பிக் தொடர் தான் தன்னுடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனால் தான் இந்திய ஹாக்கி அணி மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகம் ஆனது. அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஜெர்மனியிடம் தோல்வி அடைந்ததால் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தது.
ஆனாலும் வெண்கலபதக்கத்திற்கான போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று காத்திருந்து ஸ்பெயின் அணிடை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி 1972க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்தது இந்திய அணி. எப்போதும் இந்திய அணி வெற்றி பெற்றால் கோல் கம்பம் மீது ஏறி அமர்ந்து வெற்றியை கொண்டாடுவது ஸ்ரீஜேஷின் வழக்கம் அப்படித்தான் இந்தியா அணி இன்று அவரை வெற்றிக்கொண்டாட்டத்துடன் வழி அனுப்பி இருக்கிறது. வெற்றியுடன் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்த ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ் இந்திய நவீன ஹாக்கியின் கடவுள் என்று புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.