ஹிட்லர் அடித்த salute - இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சியும்.. எழுச்சியும்! Bronze medal | Team India

Continues below advertisement

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை தெரிந்தவர்கள் பலர் இருத்தல் கூடும். ஆனால் மற்ற விளையாட்டுகள் என்று வரும் போது அதை குறித்து தெரிந்தவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த விளையாட்டிற்கும் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் நீண்ட நாட்களாக இந்திய அணியின் ஆதிக்கம் மற்றும் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் ஆகும். 
 அந்தவகையில் இந்தியா ஒரு விளையாட்டில் நீண்ட நாட்கள் ஆதிக்கம் செலுத்திய மற்றொரு விளையாட்டு என்றால் அது ஹாக்கி தான். ஆனால் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் குறித்து பலருக்கு தெளிவாக தெரிய வாய்ப்பு இல்லை. ஏன் இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கருதபவர்களுக்கு எப்படி ஹாக்கியை பற்றி தெரிந்து இருக்க முடியும். இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்று ஒன்று இல்லை. ஆனால் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று இன்று வரை பல பேர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஒலிம்பிக் மாதத்தில் இந்தியாவின் ஹாக்கி வரலாற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம். 

இந்தியாவில் ஹாக்கி:
ஹாக்கி விளையாட்டு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டுகளில் ஒன்று. 16ஆம் நூற்றாண்டில் எகிப்து ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டிருந்தது. இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் மூலம் 1850ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியாவிற்கு வந்தது. முதலில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது. 1900களில் இந்த விளையாட்டு இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைய தொடங்கியது. 


1924ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவானது. அதற்கு அடுத்த ஆண்டு 1925ல் இந்திய ஹாக்கி சங்கம் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் இந்திய ஹாக்கி அணி முதல் முறையாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. ஹாக்கி ஜாம்பவான் என்று கருதப்படும் தாதா மேஜர் தயான்சந்த் இளம் வீரராக அப்போது களமிறங்கி இருந்தார். 

ஒலிம்பிக் ஆதிக்கம்:

ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி முதல் முறையாக 1908ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் 1920ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக விளையாடப்பட்டது. எனினும் அதற்கு பிறகு ஹாக்கி சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவான உடன் 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டேம் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் ஹாக்கி சேர்க்கப்பட்டது. இந்திய ஹாக்கி சங்கம் 1927ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றதால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றது. அதன்பின்பு நடந்தது ஒரு பெரிய வரலாறு. 
1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்திய ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 29 கோல்கள் அடித்து இந்திய அணி அசத்தியது. அதில் மேஜர் தயான்சந்த் மட்டும் 14 கோல்கள் அடித்து அசத்தினார். பின்னர் 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. 

1936ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியை சர்வாதிகாரி ஹிட்லர் நேரில் பார்த்தார். அந்தப் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதின. இந்திய அணி 8 கோல்கள் அடித்தது.அதில் தயான்சந்த் மட்டும் 6 கோல்கள் அடித்தார். அப்போது தயான்சந்த் ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான்சந்தை பாராட்டி ஜெர்மனி இராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு தயான் சந்த் ‘இந்தியா விற்பனைக்கு அல்ல’ என்ற பதிலை அளித்தார்.

அதற்கு ஹிட்லர், ‘உங்களுடைய நாட்டுப் பற்றுக்கு மொத்த ஜெர்மனியும் தலைவணங்குகிறது’ என்று தெரிவித்தார். அத்துடன் ஹிட்லர் தயான்சந்தை பார்த்து சல்யூட் அடித்தார். மேலும் தயான் சந்திற்கு ஹாக்கியின் மந்திரவாதி (Wizard of Hockey) என்ற பட்டத்தையும் ஹிட்லர் அளித்தார்.  

இதன்பின்னர் இரண்டாம் உலகப் போர் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. மீண்டும் 1948,1952,1956 ஆகிய ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்திய ஹாக்கி அணி ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்தது. அப்போது பல்பீர் சிங் சீனியர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இதற்கு பிறகு 1960ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் இடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. அப்போது முதல் இந்திய ஹாக்கியின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. 
இந்தியாவின் வீழ்ச்சி:
அதன்பின்னர் 1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. மீண்டும் 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்றது. 1975ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி தன்னுடைய முதல் உலகக் கோப்பையை வென்றது. இதனால் 1976ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் 1976ஆம் ஆண்டு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் புல் தரை ஆடுகளத்திற்கு பதிலாக செயற்கை தரை ஆடுகளத்தில் ஹாக்கி விளையாடப்பட்டது. இந்த செயற்கை தரை ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் மிகவும் திணற ஆரம்பித்தனர். அதன் விளைவாக இந்திய அணி 7ஆவது இடத்தை பிடித்து ஒலிம்பிக்கில் முதல் முறை பதக்கம் வெல்லாமல் திரும்பியது. 

புல் தரையில் விளையாடும் போது ஹாக்கி வீரர்களின் வேகத்தை விட அவர்கள் நேர்த்தியான நகர்த்தல் முக்கியமாக இருக்கும். ஆனால் செயற்கை தரையில் விளையாடும் போது வீரர்களின் நகர்த்தல் உடன் வேகமும் மிகவும் அவசியமாக இருந்தது. இந்த காரணத்தால் ஐரோப்பிய வீரர்கள் சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். ஐரோப்பிய முறை ஹாக்கி மிகவும் பிரபலம் அடைய தொடங்கியது. 

இந்தச் சூழலில் இந்தியா இனி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது. அதனை 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தவறு ஆக்கியது. தமிழ்நாட்டு வீரர் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்தியாவின் 8ஆவது தங்கப்பதக்கத்தை வென்றது. அது தான் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற கடைசி தங்கம். அதன்பின்னர் இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறவே இல்லை. 

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை தகுதி பெற்றது. அதன்பின்னர் தற்போது இந்திய அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ப்ரோ லீக் தொடரில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜென்டினா,நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஆடவர் அணி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொத்த ஒலிம்பிக் தொடரிலும் உலக சாம்பியன் பெல்ஜியம் மற்றும் உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை வீழ்த்தி 41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தனது 12ஆவது ஹாக்கி பதக்கத்தை பெற்றுள்ளது. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram