Aman Sehrawat | எப்புட்றா..! 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைப்பு!அமன் ஷெராவத் புதிய வரலாறு
இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில், 4.6 கிலோ எடையை குறைத்தது எப்படி என்பதை இந்த வீடியோவில் அறியலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற இளம் வயது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக பி.வி. சிந்து 21 ஆண்டுகள் ஒரு மாதம் மற்றும் 14 நாட்கள் என்ற வயதின்போது ஒலிம்பிக் பதக்கம் வென்றார். ஆனால், அமன் ஷெராவத் தனது 21 ஆண்டுகள் மற்றும் 24 நாட்கள் எனும் வயதிலேயே பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார். அதேநேரம், இந்த வரலாற்று சாதனையை படைப்பதற்கு முன்னதாக, 10 மணி நேரத்தில் அவர் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது பற்றி தெரியுமா?
வியாழக்கிழமை தனது அரையிறுதி தோல்விக்குப் பிறகு அமன் ஷெராவத் 61.5 கிலோ எடையுடன் இருந்தார். ஆடவர் 57 கிலோவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட சரியாக 4.5 கிலோகிராம் அதிகம் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மகளிருக்கான 50 கிலோ இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதே நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமனுக்கும் அதே பிரச்னை ஏற்பட, ஜக்மந்தர் சிங் மற்றும் வீரேந்தர் தஹியா ஆகிய இரு மூத்த இந்திய பயிற்சியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட மல்யுத்தக் குழு ஒரு அரிய பணியை கையிலெடுத்தது. அதனை வெறும் 10 மணி நேரத்தில் செய்து முடித்து, அமனை 57 கிலோ எடைக்கும் கொண்டு வந்து அசத்தினர். அதன் பலனாக, இந்தியாவிற்கான பதக்கத்தை அவர் வென்று கொடுத்துள்ளார்.
வியானன்று மாலை 6.30 மணியளவில் அரையிறுதி போட்டி முடிந்தது அதன் பிறகு முதல் நடவடிக்கையாக, தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு இரண்டு மூத்த பயிற்சியாளர்களும் அடுத்தடுத்து, மாறி மாறி அமன் உடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்ததும் ஒருமணி நேர வெண்ணீர் குளியல் மேற்கொள்ளப்பட்டது
நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கு ஒருமணி நேரம் தொடர்ந்து டிரெட்மில் ஓட்டத்தை அமன் மேற்கொண்டார். இதன் மூலம் வியர்வை வெளியேறி உடல் எடையை குறைக்க உதவியது 30 நிமிட ஓய்விற்கு பிறகு, சானா குளியல் எனப்படும் வெப்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு குளியலும் 5 நிமிடங்கள் என 5 அமர்வுகள் நடைபெற்றது. சானா குளியல் முடிவிலும் அமன் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 900 கிராம் கூடுதலாக இருந்தார். இதையடுத்து அமனுக்கு மசாஜ் செய்யப்பட்டு, லேசான ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.இறுதியாக 15 நிமிட ஓட்டமும் மேற்கொண்டார். பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் எடையை சரிபார்த்த போது, அமன் சரியாக 56.9 கிலோ எடையை கொண்டிருந்தார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் குறைவாக இருந்தார்.
பயிற்சிகளின் போது அமனுக்கு லிக்வார்ம் வாட்டர், எலுமிச்ச, தேன் மற்றும் காஃபி ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன பயிற்சிகள் அனைத்தும் முடித்து எடையை குறைத்த பிறகு அமன் உறங்க கூட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது