Lovlina Borgohain : முதல் ஒலிம்பிக்கிலேயே வெண்கலம்..வென்று காட்டிய லவ்லினா யார் தெரியுமா? | Olympics | Boxing

Continues below advertisement

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அளிக்க, மீராபாய் சானு பெற்ற வெள்ளிப்பதக்கம் இந்தியர்களை ஆசுவாசப்படுத்தியது. அதே நேரம், மிகவும் பரிச்சயமில்லாத, எதிர்பார்ப்புகள் இன்றி களத்தில் இறங்கிய லோவ்லினா பார்கோயின் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளார். தான் பங்கேற்றிருக்கும் முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, முதல் பதக்கத்தை உறுதி செய்த இந்த லோவ்லினா யார்?

சிலிர்ப்பூட்டும் ஒரு சாம்பியனின் கதை இது! அசாமைச் சேர்ந்த பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து டோக்கியோ சென்றிருக்கும் 23 வயதேயான லோவ்லினா,மகளிர் குத்துச்சண்டையில் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை சர்மெனெல்லி பஸ்னாஸை எதிர்த்து லோவ்லினா விளையாடினார். இந்த போட்டியில், 10-9 புள்ளிக்கணக்கில் துருக்கி வீராங்கனை முதல் கேமை வென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ரவுண்டிலும் அவரே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், இரண்டாவது கேமிலும் லோவ்லினா தோற்றார். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமையும் இழந்த அவர், போட்டியை இழந்தார். ஆனால், வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம், இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் இப்போது ஒலிம்பிக் பதக்கம்!

மேரி கோமிற்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இரண்டாவது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமைக்கும் இப்போது சொந்தக்காரர் லோவ்லினா. 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் பதக்கம் வென்றபோது, இந்தியாவில் குத்துச்சண்டை மீதான கவனம் திரும்பியது. மேரி பதக்கம் வென்றபோது லோவ்லினாவிற்கு வயது 15. சிறு வயது முதலே, தனது இரட்டை சகோதரிகளைப் பார்த்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட லோவ்லினா, பின் நாளில் குத்துச்சண்டையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கிடைத்ததை வைத்து ஆரம்பகட்ட பயிற்சியை மேற்கொண்ட அவர், விளையாட்டு ஆணையம் சார்பில் தரப்படும் பயிற்சிகளுக்காக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு நடந்ததெல்லாம், ஏறுமுகம்தான்! அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் லோவ்லினா. பதக்கங்களை வென்றார், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். 2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2020-ம் ஆண்டு, லோவ்லினாவின் கைகளில் அர்ஜூனா விருது தவழ்ந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் வெளியேறினார். இதனால், அசாமில் இருந்து ஒலிம்பிக் சென்ற முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் லோவ்லினா.

ஒலிம்பிக் தொடருக்கு அவர் செல்ல வேண்டும் என ஒட்டுமொத்த அசாம் மாநில மக்களும் கைகோத்து உற்சாகப்படுத்தினர். இப்போது ஒலிம்பிக் சென்றுவிட்டார். வெண்கலமும் வென்று விட்டார். அவரை வரவேற்க காத்திருக்கிறது இந்தியா. சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பெருமை லோவ்லினாவின் அரை இறுதி போட்டியை காண, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவில் அசாம் சட்டப்பேரவை 20 நிமிடங்களுக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது. லோவ்லினா பதக்கம் வென்ற இந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் லோவ்லினாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram