
CSK IPL 2025 | CSK-வின் பணத்தாசை? பலிக்காத தோனி SENTIMENT தொடர் தோல்விக்கு காரணம் என்ன? | MS Dhoni | Dhoni Retirement
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கட்டமைப்பே அதன் தோல்விக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். தோனி மட்டும் போதுமா? என்று புதிய தலைமுறை தலையில் தட்டியுள்ளனர் பணத்தாசை தான் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றின் மிகவும் வெற்றிகரமான அணி என்ற பெருமையை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோசமான தோல்விகளை அடுத்தடுத்து கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 18 வருடங்களில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி இப்படி தடுமாறியதே கிடையாது. தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளும் சென்னை ரசிகர்கள், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு கூட இன்றைய சிஎஸ்கேவிடம் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்புகின்றனர். வெற்றிக்கான முனைப்பு இல்லாததன் விளைவே கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியுற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை உச்சரித்தாலே, 7ம் எண் பொறித்த ஜெரிசியை அணிந்து ஸ்டம்பிற்கு பின்னாள் நிற்கும் தோனி எனும் ஜாம்பவான் தான் அனைவரது நினைவிற்கும் வருவார். சிறந்த வீரர்களை அல்ல தனக்கான வீரர்களை தேர்வு செய்து, அவர்களை சிறந்தவர்களாக மாற்றி வலுவான பிளேயிங் லெவனை கட்டமைத்தார். அதன் மூலம் 5 முறை கோப்பையையும் வென்றார். அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறனை தாண்டி, தலைவனாக களத்தில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு நிகர வேறு எவரும் இல்லை. அதன் காரணமாகவே ஐபிஎல் வரலாற்றின் ஆகச்சிறந்த அணியாக சென்னை திகழ்கிறது.
அதேநேரம், காலம் மற்றும் மாற்றத்தை யாராலும் தவிர்க்கவும், தடுக்கவும் முடியாது. அதன் விளைவாகவே தோனியும் கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜிடம் பொறுப்பை வழங்கினார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகமோ கள எதார்த்தை உணராமல் இன்னும் தோனி பாணியிலேயே ஐபிஎல் போட்டிகளை அணுகி வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு, மாடர்ன் டே கிரிக்கெட்டை வெற்றி பெற முடியும் என்ற முடிவு சென்னை அணிக்கே ஆபத்தாக மாறியுள்ளது. வீரர்களின் அனுபவத்தோடு தன்னுடைய உள்ளுணர்வையும் கலந்து அணிக்கான வெற்றிகளை தோனி ஈட்டினார். டாடி கிளப் என விமர்சனங்களை கூட, கோப்பையை வென்றதன் மூலம் தவிடுபொடியாக்கினார். ஆனால், அதேபோன்ற செயல்பாட்டை ருதுராஜிடமும் சென்னை அணி எதிர்பார்ப்பது நியாயமா?
ஒவ்வொரு ஐபிஎல் அணி நிர்வாகமும் ஆரம்பத்தில் தங்களின் அடையாளமாக, பிரபல மற்றும் மூத்த இந்திய வீரர்களை கொண்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் மாடர்ன் டே கிரிக்கெட்டில் வெல்ல வேண்டும் என்றால், பிரபலங்கள் அல்ல திறமையாளர்களே தேவை என்பதை அணி நிர்வாகங்கள் உணர்ந்தன. அதன் காரணமாகவே இளம் வீரர்களை தேர்வு செய்து தங்களுக்கான அணியை கட்டமைத்தன. அந்த விஷயத்தில் தோனி காலத்திலேயே சென்னை மிகவும் பின்தங்கி விட்டது என்பதே உண்மை. உதாரணமாக, கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னையின் தோல்விக்கு காரணம், எதிரணியில் இருந்த இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடே காரணமாகும். டெல்லியின் விப்ராஜ் நிகம், பெங்களூருவில் ரஜ்த் படிதார், ராஜஸ்தானின் ராணா என பலரை குறிப்பிடலாம். ஆனால், சென்னை அணி வார்த்தெடுத்த இளம் வீரர்கள் என ஆராய்ந்தால் ருதுராஜை தவிர வேறு எந்தவொரு பெரிய வீரரையும் உங்களால் அடையாளம் காண முடியாது.
தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபோதே, சென்னை அணி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. போட்டியின் மீதான அதன் அணுகுமுறை தொடங்கி, பிளேயிங் லெவனை கட்டமைப்பது என பல்வேறு விவகாரங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதனை ஏற்காமல் சக்சஸ் ஃபார்முலா என்ற பெயரில், இன்றும் தோனி பாணியிலேயே ஐபிஎல் போட்டிகளை அணுகுவது முட்டாள்தனமானது. அணியில் இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தற்போது தள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு , இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களை தங்களுக்கான எதிர்காலமாக வார்த்தெடுக்க வேண்டும். இதற்கு மும்பை, டெல்லி என பல அணிகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தோனி, சக்கர நாற்காலியில் இருந்தால் கூட சென்னை அணி நிர்வாகம் என்னை விளையாட வைக்கும்போல என பேசியிருந்தார். இதை அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டாலும், சிஎஸ்கே நிர்வாகம் அதையும் செய்யக்கூடியது என்று தான் ரசிகர்கள் அஞ்சுகின்றனர். தோனியின் பெயரை விளம்பரத்திற்காக பயன்படுத்தி, பணம் பார்ப்பதே சென்னையின் நோக்கமாக உள்ளது. தோனியின் கடைசி சீசன், கடைசி போட்டி என பல்வேறு வதந்திகள் பரவ, டிக்கெட் விலைகள் தாறுமாறாக உயருகின்றன. அதன்படி, தோனி வெறும் விளம்பரப் பொருளாகவே சென்னை அணியில் தொடர்வது, அவரது பெருமைக்குரிய சகாப்தத்திற்கே இழிவாக அமைந்துள்ளது. எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் சென்னை அணி நிர்வாகம் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தவறினால், ”நாங்க எல்லாம் ஒரு காலத்தில்” என பழைய பஞ்சாங்கத்தையே உருட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.