ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir

Continues below advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை இல்லாத அளவிலான அதிகாரமிக்க பயிற்சியாளராக, கவுதம் கம்பீர் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனை காட்டிலும் அதிகாரமிக்கவராக, இனி பயிற்சியாளர் கம்பீர் செயல்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோரின் ஓய்வை தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியில் வலுவான நட்சத்திர வீரர்கள் என யாரும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்திய அணியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தனது ஆலோசனையின்படி அதனை செயல்பட கம்பீருக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. கம்பீர் பயிற்சியாளராக வரும்போதே, அணியில் நட்சத்திர வீரர்களின் தாக்கம் என்பதை அழிக்க வேண்டும் என இலக்கு வைத்து இருந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படியே, கம்பீரின் எரா என்ற புதிய பயணத்தை புதுமுகங்களை கொண்டு, வரும் WTC தொடரில் இருந்து தொடங்க உள்ளாராம். கம்பீரின் இந்த திட்டத்திற்கு அஜித் அகர்கரும் முழு ஆதரவு அளித்ததையே தற்போதைய சூழல்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் தான் முக்கிய முடிவை எடுப்பவராக திகழ்கிறார். பயிற்சியாளருக்கும் நிகரான அதிகாரங்கள் இருந்தாலும், கேப்டனின் முடிவுகளே தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.  சவுரவ் கங்குலி, தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக இருந்தபோது, அவர்களது முடிவே இறுதியானதாக இருந்தது. ஆனால், அந்த கலாச்சாரம் கம்பீரின் பயிற்சி காலத்தில் இனி இருக்கப்போவதில்லை. அவரது முடிவுகளே உறுதியானதாகவும், இறுதியானதாகவும் இனி திகழப்போகிறது. ரோகித் மற்றும் கோலி அணியில் இருந்தபோதே, அவர்கள் கம்பீருடன் பெரிதும் இணக்கம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதிகாரம் இரண்டு பக்கமும் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்திய அணி இதுவரை கண்டிராத அதிகாரமிக்க ஒரு பயிற்சியாளராக கம்பீர் உருவெடுத்துள்ளார்.

மாற்றத்திற்கான கட்டத்தில் உள்ள இந்திய அணி, உள்ளூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி மற்றும் பார்டர் கவாஸ்கர் கோப்பை இழப்பு போன்ற தோல்விகளை எதிர்காலத்தில் தவிர்க்க, தனக்கு போதுமான அதிகாரங்களை வழங்க பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, இளம் கேப்டனாக நியமிக்கப்பட உள்ள சுப்மன் கில் குறைந்தபட்சம் தனக்கான வலுவான இடத்தை எட்டும் வரையிலாவது, அவர் கம்பீரின் பேச்சை கேட்டு நடந்துகொள்வார் என நம்பப்படுகிறது. கில் தற்போதே நட்சத்திர வீரராக அடையாளம் காணப்பட்டாலும், கம்பீரின் முடிவுகள் தொடர்பாக கேள்வி கேட்கும் அளவிற்கு அவர் இன்னும் வளரவில்லை என்பது மறுக்கமுடியாதது ஆகும். அந்த கேள்வி கேட்கும் அந்தஸ்தை கொண்டிருந்த பும்ராவின் கேப்டன்சி வாய்ப்பும், அவரது உடல்தகுதியை காரணம் காட்டி தட்டி பறிக்கப்பட்டுள்ளது.

டி20 போட்டிக்கான இந்திய அணியில் எப்படி தனிக்காட்டு ராஜாவாக கம்பீர் கோலோச்சி வந்தாரோ, அதேநிலையை தான் தற்போது டெஸ்டிலும் எட்டியுள்ளார். தற்போதைய சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. காரணம், 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, அந்த ஃபார்மெட்டில் மட்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து விளையாடி  வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola