
Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போடிட்யில் மும்பை அணிக்காக களமிறங்கி சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போடிட்யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்த, விக்னேஷ் புதூர் யார் இவர் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் என்றாலே அனைவரது நினைவிருக்கும் வருவது சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டி தான். அந்த அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அந்த போட்டியின் மீது உள்ளது. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் தான் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டி அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை தடுமாறினாலும், இறுதிகட்டத்தில் அதிரடி காட்டி சுமாரான ஸ்கோரை எட்டியது. ஒரு கட்டத்தில் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என கருதினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து போட்டி மெல்ல மும்பை அணி பக்கம் சாய்ந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் பதற்றத்தில் மூழ்கினார். வெற்றி யார் வசமாகும் என கோடிக்கணக்கான மக்களிடையே ஏற்பட்ட பரபரப்பிற்கு, வெறும் 24 வயதே ஆன விக்னேஷ் புதூர் எனும் சுழற்பந்து வீச்சாளர் தான் காரணம்.
156 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி வேகமாக பயணித்து கொண்டிருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா கூட்டணியை தவிர்க்க முடியாமல் மும்பை அணி தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது இம்பேக் பிளேயராக வந்த விக்னேஷ் புதூர், தான் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே, சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை (53) ஆட்டமிழக்கச் செய்தார். இது அவரது முதல் ஐபிஎல் விக்கெட் ஆகும். பின்னர் போட்டியின் 10வது ஓவரில் சிவம் துபேவை (9) அவுட்டாக்கினார். தொடர்ந்து தான் வீசிய மூன்ராவது ஓவரில் தீபக் ஹுடாவை ஆட்டமிழக்கச் செய்து, 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையை தடுமாற செய்தார். இறுதியில் 4 ஓவர்கள் முடிவில், 32 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து, தனது அறிமுக போட்டியை மறக்க முடியாததாகவும், ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் மாற்றினார்.
இருப்பினும் மறுமுனையில் இருந்து பந்துவீச்சாளர்கள் யாரும் ஒத்துழைக்காததால், மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர் 11 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கேரள கிரிக்கெட் லீக்கின் முதல் சீசனில் அவர் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக களமிறங்கினார். அந்தப் போட்டியில் புதூர் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார், ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அவரை வலைப்பயிற்சிக்காகவும் அழைத்தனர்.
விக்னேஷ் புதூர் இதுவரை கேரள அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியதே இல்லை. ஆனால் அவர் U-14 மற்றும் U-19 மட்டங்களில் விளையாடியுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். அதனைதொடர்ந்து, அவர் தனது ஐபிஎல் ஒப்பந்தத்தை, கடந்த மெகா ஏலத்தின் போது பெற்றார். ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது.
விக்னேஷின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநர். அவரது தாயார் குடும்பத்தை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கிறார். உள்ளூர் கிரிக்கெட் வீரர் முகமது ஷெரிப்பால் லெக் ஸ்பின்னை முயற்சிக்கும்படி கேட்கப்படுவதற்கு முன்பு, விக்னேஷ் நடுத்தர வேக பந்துவீச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் திருச்சூருக்குச் சென்று செயிண்ட் தாமஸ் கல்லூரிக்காக கேரள கல்லூரி பிரீமியர் டி20 லீக்கில் அபாரமாக செயல்பட்டது அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் SA20 க்காக தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் MI கேப் டவுனுக்காக வலைபயிற்சி பந்து வீச்சாளராக இருந்தார். தற்போது மும்பை அணிக்காக களமிறங்கி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மும்பை கண்டெடுத்த மற்றொரு முத்து என்றும், அவரை கொண்டாடப்பட்டு வருகிறார்.