Gold Price Hike|சவரனுக்கு ரூ.9,520 எகிறிய Gold நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு பின்னணி என்ன?
இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1 லட்சத்து 34 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.. இன்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 1190 ரூ உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் 16,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது..ஏன் இந்த கிடுகிடு உயர்வு? தங்கம் விலை எதுவரை உயரும்? குறைய வாய்ப்புள்ளதா? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..
தங்கம் விலை க்டந்த 2025-ல் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில், அதில் சிறிதளவும் மாற்றமின்றி இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது. 2025-ம் ஆண்டு தொடங்கும்போது இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ. 7,800 ஆக இருந்தது. அதுவே 2025-ம் ஆண்டு முடியும்போது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ. 13,588. கிட்டத்தட்ட 76 சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்தது. இதுவே 2026 ஜனவரி 29 நிலவரப்படி இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,190 உயர்ந்து ரூ. 16,800-க்கும், ஒரு சவரன் ரூ. 1,34,000-க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் நேற்று இரவோடு இரவாக அமெரிக்க எடுத்த முடிவுதான்.
பொதுவாகவே, தங்கம் விலை உயர்வதற்கு சர்வதேச சூழல்தான் காரணம். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடாக இருப்பதால், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் பங்குச் சந்தை சரிவு ஏற்படும்போது முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலை உயர்கிறது. அதோடு, சர்வதேச போர் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதால் தங்கம் விலை உயர்கிறது. அதேபோல், சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்புக்காக தங்கத்தை வாங்கிக் குவிக்கும்போது தங்கத்துக்கான தேவை அதிகரிப்பதால் தானாகவே தங்கத்தின் விலை உயரும். அதேபோல், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி தமது வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, வங்கி முதலீடுகளைக் காட்டிலும் தங்கத்தின் முதலீடு லாபமாக இருப்பதால் தங்கத்தின் விலை உயரும். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்போது அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலை உயரும். இந்தியா தங்கத்தை டாலரில் இறக்குமதி செய்வதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு இந்தியாவில் தங்கத்தின் விலையை மேலும் கூடுகிறது.
இவை தங்கம் விலை உயர்வுக்குப் பொதுவான காரணங்கள். ஆனால், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி எடுத்த முடிவுதான்.அதாவது, ஃபெடரல் வங்கி தனது வட்டி விகிதம் 3.5 சதவிகிதம் முதல் 3.75 சதவிகிதம் வரையிலான வரம்பு எந்த மாற்றமின்றி தொடரும் என்று அறிவித்திருப்பதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதனால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 டாலரைத் தாண்டி விற்பனையாவதால் அது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. தங்கத்துக்கு ஈடாக நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்திருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையுயர்வு இதோடு நிற்குமா அல்லது கூடுமா அல்லது குறையுமா என்பது உறுதியாக தெரியாத சூழலே நிலவினாலும், தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டு லட்சத்தை தொடும் என்றும், வெள்ளியின் இரண்டு மடங்காக உயரக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்று 1 கிராம் வெள்ளியின் விலை 425 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.