Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

Continues below advertisement

உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோவை மெக்சிகோ ராணுவப் படை சுட்டுக்கொன்றதால் அந்நாடே பற்றியெரியும் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பல வருடங்களாக அமெரிக்காவின் பிடியில் சிக்காமல் ஆட்டம் காட்டி வந்த இந்த எல் மென்ச்சோ யார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உலக அளவில் கொகைன் போன்ற போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நாடுகள் மெக்சிகோ மற்றும் கொலம்பியா. இதில், விக்ரம் படத்தில் வரும் Drug Mafia ரோலக்ஸ் கதாபாத்திரத்தைப் போல கொலம்பியாவில் 1970 முதல் 90 காலகட்டங்களில் நிஜ ரோலக்ஸாக வாழ்ந்தவர் பாப்லோ எஸ்கோபார்.

வறுமையின் காரணமாக படிப்பை உதறிய எஸ்கோபார், 1970 தொடக்க காலகட்டத்தில் தனது 20 வயது தொடக்கத்தில், கல்லறைகளில் விலையுயர்ந்த கற்களைத் திருடுதல், கார் திருட்டு, ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு என குற்றச் செயல்களில் ஈடுபட்டார்.

அதையடுத்து, 1970 நடுப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் இறங்கிய எஸ்கோபார் 1980, 90-களில் ஒரு போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தையே நடத்தினார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக 1980-களில் 30 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட எஸ்கோபார், அப்போது உலகின் டாப் 10 பணக்காரார்கள் பட்டியலில் ஒருவாராகவும் இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுக்குள் நாள்தோறும் டன் கணக்கில் ஊடுருவிய போதைப்பொருளில் 80 சதவிகிதம் இவருடையதுதான். அதற்கு இடையூறாக இருந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என எஸ்கோபாரால் கொல்லப்பட்டவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், கால்பந்து மைதானம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை எஸ்கோபார் நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இறுதியில், 1993-ல் போலீஸ் மற்றும் ராணுவத்திடமிருந்து தப்பிக்கும்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் எஸ்கோபார் இறந்தார்.

எஸ்கோபாரின் மரணத்தை கொலம்பியா கொண்டாடிய அதேவேளையில் அவரின் இறுதிச் சடங்கில் 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அவரைப்போலவே  போதைப்பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டுவந்த நிகழ்கால எஸ்கோபார் `எல் மென்ச்சோ' எனப்படும் நெமேசியோ ஒசேகுராவை மெக்சிகோ ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது.

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவால் தேடப்படும் most wanted குற்றவாளியான `ஜாலிஸ்கோ நியூ ஜெனெரேஷன் கார்டெல்' அமைப்பின் தலைவர் எல் மென்ச்சோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கும்பலுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இது மெக்சிகோ அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில் எல் மென்ச்சோவின் மரணம் ஒட்டுமொத்த மெக்சிகோவையும் பற்றியெரியவைத்திருக்கிறது.

மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாரா உட்பட சுமார் 9 மாகாணங்களில் எல் மென்ச்சோவின் ஆதாரவாளர்கள், வாகனங்களை தீயிட்டு எரித்தல், வங்கி, வணிக வளாகங்களை அடித்து நொறுக்குதல் என கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியிருக்கின்றனர். பல இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய மரணத்தால் நாட்டையே கலவரக்காடாக மாற்றியிருக்கும் எல் மென்ச்சோவின் பின்ணனியைப் பொறுத்த வரையில், 1966-ல் மெக்சிகோவில் மிக்கோவாகன் மாகாணத்தில் இவர் பிறந்தார்.

குடும்பத்தின் வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்திய எல் மென்ச்சோ தனது 14 வயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார்.

அங்கு வெவ்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்த எல் மென்ச்சோ, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கி வைத்திருந்ததாகவும் முதல்முறையாக 19 வயதில் கைதானார்.

அதைத்தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் போதைப்பொருள் விற்ற குற்றச்சாட்டில் மீண்டும் கைதான எல் மென்ச்சோ மெக்சிகோவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்து போதைப்பொருள் குற்றச்சாட்டில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்குள்ளானார்.

பின்னர் 3 ஆண்டுகள் கழித்து 30 வயதில் பரோலில் வெளிவந்து போலீஸ் படையில் சேர்ந்த எல் மென்ச்சோ, அங்கிருந்து வெளியேறி மிலேனியா கார்டெல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலில் சேர்ந்தார்.

அங்கு தன்னுடைய Boss பலர் கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்டதையடுத்து 2010 காலகட்டங்களில் `ஜாலிஸ்கோ நியூ ஜெனெரேஷன் கார்டெல்' என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பை உருவாக்கினார்.

கேங் வார், பாதுகாப்பு அதிகாரிகளை நேரடியாகத் தாக்குவது என எல் மென்ச்சோ வெகு சீக்கிரமே மெக்சிகோவில் Most Wanted குற்றாவாளியானார்.

தொடர்ந்து ஜாலிஸ்கோ உள்ளிட்ட மாகாணங்களில் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை எல் மென்ச்சோ விரிவுபடுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் பல்வேறு கிரிமினல் கேங்ஸ் உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். 

கொலை, கொள்ளை ஆகியவற்றைக் கடந்து போதைப்பொருள் கடத்தலில் மிகப்பெரிய லாபம் பார்த்த எல் மென்ச்சோவின் நிகர மதிப்பு 2019-ல் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என்று அவரைக் கண்டுபிடிக்கும் குழுவின் தலைவரே பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

தற்போது அவருடைய அமைப்பின் நிகர மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்குள் ஊடுருவும் முக்கால்வாசி போதைப்பொருள் எல் மென்ச்சோவின் சப்ளைதான்.

இதனால் அமெரிக்கா, எல் மென்ச்சோ பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 டாலர் பரிசுத்தொகையை அறிவித்தது. 2024-ல் அதை 15,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியது.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு எல் மென்ச்சோவின் அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் அமெரிக்கா அறிவித்தது. மேலும், போதைப்பொருள் கடத்தலை தடுக்காவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மெக்சிகோ அரசுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், மெக்சிகோ ராணுவ படை தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலம் எல் மென்ச்சோவின் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியதில் எல் மென்ச்சோ உயிரிழந்தார்.

இதில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை என்று மெக்சிகோ கூறினாலும், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு தான் எல் மென்ச்சோ பற்றிய ரகசிய தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எல் மென்ச்சோ கொல்லப்பட்டதை அமெரிக்கா வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola