Khorasan : காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமான ISIS கொரசான் அமைப்பு..யார் இவர்கள்?
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த மோசமான தீவிரவாத தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இஸ்லாமிக் அரசு கொரசான் (Islamic State Khorasan) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ் (ISIS Khorasan) : ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற அமைப்பின் துணை கிளையாக, இந்த கொரசான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்தது. நடு ஆசியாவையும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கிய 'கொரசான்' என்ற அகண்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்காக 2015-ஆம் ஆண்டில் உருவானது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைப் போலவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. லஷ்கர்-ஏ-தொய்பா (எல்இடி), ஹக்கானி அமைப்பு, ஜமாத்-உத்-தவா, தலிபான், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் இந்த பயங்கரவாதக் குழு மாறுபடுகிறது. இருப்பினும், லஷ்கர்-ஏ-தொய்பா, தெஹ்ரிக்-இ-தலிபான் போன்ற அமைப்புகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் இஸ்லாமிய அரசு கொரசான் அமைப்பில் சேர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. மற்ற அமைப்புகளை ஒப்பிட்டால் எப்படி மாறுபடுகிறது? இன்றைய பயங்கரவாத குழுக்களுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா தாயகமாக திகழ்கிறது. இருப்பினும், லஷ்கர்-ஏ-தொய்பா-வுக்கும், ஐஎஸ்எஸ் அமைப்புக்கும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன.
முதலாவதாக, லஷ்கர்-ஏ-தொய்பா ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. லஷ்கர்-ஏ-தொய்பா இறையியல் (Theology) சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்தது. நாடு, எல்லை, அரசு போன்ற சொல்லாடல்களைத் தாண்டி உலகளாவிய இஸ்லாமிய மார்க்கத்தை முன்னெடுத்தது. மேற்கத்திய நாடுகள் தலையீட்டில் இருந்து இஸ்லாமிய கோட்பாடுகளை மீட்டெடுக்க முனைந்தது. இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளை தனது எதிரியாக்கியது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உலகளாவிய இஸ்லாமிய மார்க்கத்தை முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய நாடுகளில் தூய்மையான இஸ்லாமிய அரசு நிறுவப்படவேண்டும் என்பதே இதன் முதன்மையான நோக்கு. 2003-ஆம் ஆண்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் ஈராக் போர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தொடக்கமாக உள்ளது.
போருக்குப் பிந்தைய நாட்களில் ஈராக் சமூகத்தில் சன்னி, ஷியா, குர்தூஸ் என மூன்று பிரிவுகளுக்கான இடைவெளி அதிகரித்தது. ஈராக்கில் உருவாக்கப்பட்ட Coalition Provisional Authority என்ற ஆட்சி நிர்வாகத்தின் கீழ் சன்னி பிரிவினர் ஓரங்கப்பட்டனர். இதில், விரக்தியடைந்த சிலரே பிற்காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைத் தொடங்கினர். எனவே, ஐஎஸ்.ஐ.எஸ் அமைப்புக்கான நோக்கமும், அவர்களுக்கான எதிரியும் மாறுபடுகிறது. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு, மேற்கத்திய கலாச்சாரம்தான் நிரந்தர எதிரி இருக்கிறது. எதிரி முழுமையாக வீழ்த்தப்படும்வரை அதன் போராட்டம் (ஜிகாத்) தொடரும். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உள்ளூர் மட்ட தலைவர்களின் எதேச்சையான போக்கு, ஆட்சியில் அதிகாரம், ஷரியத் சட்டம் போன்றைவைகளே முக்கிய நோக்கங்களாக உள்ளன. தலிபான் அமைப்புடன் எப்படி மாறுபடுகிறது? தலிபான் அமைப்பு பொதுவாக தேசியம், தேசியவாதம், தேசம்-நாடு போன்ற சொல்லாடல்களை முன்னெடுக்கிறது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் என்ற நிலப்பரப்பை கட்டிக்காக்க விரும்புகிறது. வரலாற்று ரீதியாக இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக, அல்-கொய்தா மற்றும் இதர இஸ்லாம் பயங்கரவாத அமைப்புகளில் மிகவும் குறைவான தலிபான் அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு காஷ்மீர் பற்றியும், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் பற்றியோ பெரிய புரிதலும் இல்லை,ஆர்வமும் இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ்- இஸ்லாமிக் அரசு கொரசான் அமைப்பு எது மோசம்: ஐஎஸ்எஸ் பொதுவாக மத்திய ஆசியா நிலப்பரப்புகளில் அதிகமாக குறிவைக்கிறது. இதன் காரணமாக, தெற்காசியா பற்றிய புரிதல் அதனிடம் அதிகம் இல்லை. ஆனால், இஸ்லாமிக் அரசு கொரசான் தெற்காசியாவை அதிகம் குறிவைக்கிறது. இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது என்ற செய்தியை அவ்வப்போது நாம் ஊடகங்களில் கேள்விப்பட்டிருப்போம். இவர்களில், பெரும்பாலானோர் அனைவருமே இஸ்லாமிக் அரசு கொரசான் அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் உள்ளனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் தாக்குதலுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றது. இதில், 29 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில், கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஷீத் அப்துல்லா உட்பட்ட மூன்று இந்தியர்களும், தாஜிக்ஸ் பிரிவினர்களும், பாகிஸ்தானியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, உருது மொழியில் வீடியோ வெளியிடப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகு, அப்துல் ரஷீத் அப்துல்லா பேசிய வீடியோவும் உறுதி மொழியில் இருந்தது. அதாவது, இந்த சம்பவத்தின் தெற்காசியாவின் அடையாளங்களை இந்த அமைப்பு பெற்றது.