
ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்! முதல் நாளே அதிரடி உத்தரவு! ஷாக்கில் இந்தியா
அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளே வரி விவகாரத்தில் அதிரடியான உத்தரவுகளை கொண்டு வந்து தற்போதே தனது ஆட்டத்தை ஆரம்பித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் 47-வது அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதேபோல் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் கலந்து கொண்டது கவனம் பெற்றது.
ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடனேயே, முந்தைய ஆட்சியில் ஜோ பைடன் கொண்டு வந்த 78 கொள்கைகளை திரும்ப பெறுவதாக உத்தரவு போட்டார். அதேபோல் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, 3-ம் உலகப் போர் நடைபெறுவதை தடுப்பேன் என சூளுரைத்துள்ளார் ட்ரம்ப்.
மிக முக்கியமாக அமெரிக்கர்களின் நலனுக்கான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிப்போம் என மிரள வைக்கும் உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 10 சதவீதமும், சீனப் பொருட்களுக்கு 60 சதவீதமும், கனடியன் மற்றும் மெக்சிகன் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பாகவே அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை ட்ரம்ப் எச்சரித்து வந்தார். நீங்கள் அதிக வரி விதித்தால் நாங்களும் அதை விட அதிகமாக வரி விதிப்போம் என எச்சரிக்கை கொடுத்திருந்தார். கடந்த டிசம்பர் மாதத்திலும், பழிக்குப் பழி என்பதை நோக்கியே தனது நிர்வாகம் இருக்கும் என ஒரே போடாய் போட்டார் ட்ரம்ப். பதவியேற்ற உடனேயே சொன்னதை செய்து அதிரடி காட்டியுள்ளார். வரி விவகாரத்தில் மற்ற நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ட்ரம்பின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
அதேபோல் இனி அமெரிக்காவில் ஆண் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என சொல்லியுள்ளது விவாதமாக மாறியுள்ளது. வெற்றி பெற்ற உடனேயே இதனை செய்தே தீருவேன் என விடாப்பிடியாக இருந்த ட்ரம்ப், பதவியேற்றதும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்து நிர்வாக ஆணையில் கையொப்பமிட்டுள்ளார்.