Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் அலர்ட் விடுத்துள்ளார்.
வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனைடுத்து 10 நாட்களுக்கு மழை ஓய்ந்திருந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் அடுத்தக்கட்ட ஆட்டம் தொடங்கியுள்ளது. வங்க கடலில் அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளது. அதில் ஒன்று தான் தற்போது தீவிரம் அடைந்து புயலாக உருமாற உள்ளது.
நாளை அல்லது நாளை மறு தினம் வலுபெறவுள்ள புயலுக்கு சின்யார் என பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த நிலையில் இலங்கை தென்மேற்கு வங்ககடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகை, திருவாரூர் போன்ற 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொட்டிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரமும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கை , தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இத்தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரம் காலை வரை தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கன முதல் மிககனமழை வரை பதிவாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், கடலோரத்தின் ஒரிரு இடங்களில் அதித கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி,மதுரை, விருதுநகர், சிவகங்கை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். வடமாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம்.ஒட்டுமொத்தமாக இன்றும் 4ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.