CM Bhupesh Baghel Father Arrest: ”யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி” தந்தையை கைது செய்த முதலமைச்சர்!
CM Bhupesh Baghel Father Arrest: தந்தையை சிறைக்கு அனுப்பிய தனயன் - இப்படியும் ஒரு முதலமைச்சரா? கட்சிக்காரர்கள் கொலைக்குற்றமே புரிந்தாலும் அவர்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காத ஆளும் கட்சிகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு சமூகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தன் தந்தையையே சிறைக்கு அனுப்பிய முதலமைச்சரை கேள்விப்பட்டிருக்கிறோமா? இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்திருப்பது சத்தீஸ்கரில் தான்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். 86 வயதான தன் தந்தையை தான், அவர் தெரிவித்த கருத்துக்காக சிறைக்கு அனுப்பியிருக்கிறார் பூபேஷ் பாகல். நந்தகுமார் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லையெனினும், ஓபிசி பிரிவினருக்கான உரிமைகளுக்காக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில் தான், பிராமணர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள், அவர்களை புறக்கணிக்க வேண்டும், அவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடக்கூடாது என்றெல்லாம் கருத்து கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த கருத்து பிராமண சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. நந்தகுமார் பாகல் பிராமண சமூகத்தை இழிவு படுத்திவிட்டதாகக் கூறி சர்வ் ப்ராமின் சமாஜ் என்ற அமைப்பு நந்தகுமார் பாகல் மீது உத்தர பிரதேசத்தில் புகார் அளித்தது. தனது தந்தையின் பார்வைக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவரது கருத்துகளில் இருந்து நான் மாறுபடுகிறேன்.
ஆனால் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது தான். எனது தந்தை என்ற வகையில் நான் அவரை மதிக்கிறேன். ஆனால், செய்யும் தவறுகளுக்காக அவர் முதலமைச்சரின் தந்தை என்றாலும் தண்டனை அனுபவித்தே தான் ஆக வேண்டும். அவரது கருத்துகளுக்காக நான் வருந்துகிறேன் என்று கூறியிருந்தார் பூபேஷ் பாகல். இதனைத் தொடர்ந்து நந்தகுமார் பாகல் மீது, பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களைச் செய்தல் மற்றும் பயம் அல்லது எச்சரிக்கை செய்யும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராய்ப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நந்தகுமார் பாகலுக்கு ஜாமீன் கேட்கப்படாததால் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ராய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 நாள் சிறையில் இருக்கும் அவரை செப்டம்பர் 21ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்த தவறுக்காக தன் தந்தையையே முதலமைச்சர் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது