வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறைக்கு வந்து அமர்ந்து தோளில் மாட்டியிருந்த புத்தக பையை கழட்டி வைப்பதற்கு முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் CCTV காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
விழுப்புரம் திருவிக வீதியில் தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நேரம் மட்டுமின்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம் போல் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்க வருகை தந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மோகன்ராஜ் என்ற மாணவர், தனது வகுப்பறைக்கு சென்று பென்ஜில் அமர்ந்த சில வினாடிகளில் திடீரென மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பறையில் சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மயங்கி விழுந்த மாணவன் மோகன்ராஜை, ஆசிரியர்கள் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் மோகன்ராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளி வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் இன்று சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பள்ளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வகுப்பறைக்கு வந்து அமர்ந்து தோளில் மாட்டியிருந்த புத்தக பையை கழட்டி வைப்பதற்கு முன்பாக மாணவன் மோகன்ராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.