Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?

விளாத்திகுளத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சந்தேகத்தின் பேரில் 27 வயதான இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மருத்துவ பரிசோதனை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டில் கழிவறை இல்லாததால் இயற்கை உபாதைக்காக அருகே இருந்த காட்டு பகுதிக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல்நிலையம் சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில் வேடநத்தம் அருகே காட்டு பகுதியில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் மாணவி. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என சொல்லி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன எம்.பி கனிமொழி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் அரசு துணை நிற்கும் என உறுதி கொடுத்தார். 

இந்த வழக்கில் உறவினர்கள், நண்பர்கள், சக மாணவர்கள் என சந்தேகம் இருக்கும் 20க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 10 தனிப்படை போலீசார் மாணவி கொலை செய்யப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான இளைஞரை பிடித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவரிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

6 நாட்களாக குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola