”BRO SATURDAY PARTY-யா” விஜய்க்கு எதிராக போஸ்டர்! நாகை தவெகவினர் ஷாக்
Bro idhu politics Saturday party illa என விதவிதமான வசனங்களுடன் நாகைப்பட்டினம் முழுவதும் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் திமுகவின் சாதனைகளை குறிப்பிடும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
2026 தேர்தலை குறிவைத்து களமிறங்கியுள்ள விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் விஜய் சுற்றுப்பயணம் வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் அடுத்த வார அரசியல் டாப்பிக்காக தவெக இருக்க வேண்டும் என்பதை குறிவைத்து இந்த மூவ் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். ஆனால் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் செய்வது எதிர் தரப்பினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.
விஜய் தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்பதை தொடர்ந்து சொல்லி வரும் விஜய், மாநாடு மற்றும் பிரச்சாரங்களில் திமுக தலையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் விஜய் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். விஜய்யை பார்க்க கூட்டம் அதிகம் வரும் என்பதால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் உள்ள கட்டடங்கள், ட்ரான்ஸ்பார்மர்கள், தடுப்புகளில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,
இந்த நேரத்தில் நாகப்பட்டினம் முழுவதும் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. Bro politics Saturday party illa, adhu 24 7 duty, bro politics na edho weekend movie release nu nenaikirar என விதவிதமாக கருப்பு நிற போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதே நேரத்தில் நாகப்பட்டினத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த வார பிரச்சாரத்தின் போதும் பெரம்பலூரில் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது நாகையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், எதிர் தரப்பினர் வேண்டுமென்றே போஸ்டர்களை ஒட்டி வருவதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.