திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

திருச்சியில், திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் இளைஞர் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி எம்பிஏ படித்துக் கொண்டே பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். 

இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த வியாகுல நவீன் என்ற வாலிபருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வியாகுல நவீன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் திருமணம் செய்ய அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த நவீன், திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். 

அந்தப் பெண் மயங்கி விழுந்த நிலையிலும், நவீன் தொடர்ந்து கல்லால் அவரைத் தாக்கினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற பொதுமக்கள், உடனடியாகச் சென்று நவீனை மடக்கிப் பிடித்து கைகளைக் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே. நகர் காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைதான நவீனிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தன்னை விட்டு வருமாறு பெண்ணின் பெற்றோர் வற்புறுத்திய ஆத்திரத்தில் தாக்கியதாக நவீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

திருச்சியின் மையப் பகுதியில், நடுரோட்டில் கல்லூரிப் பெண்ணை வாலிபர் கல்லால் தாக்கியதும், அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola