ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
தங்கம் விலை சவரன் 1 லட்சத்தை கடந்த நிலையில், விலை குறையவே குறையாதா? என்ற கேள்வி நம் எல்லோரிடமும் உள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, தங்கம் விலை குறைய வாய்ப்புள்ள 10 காரணங்களை பார்க்கலாம்....
தங்கம் விலை சர்வதேச அளவில் டாலரில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தால், தங்கம் விலை தானாகவே குறையத் தொடங்கும். தற்போது உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போன்ற போர்ச் சூழல்கள் இருப்பதால் தங்கம் விலை உயர்கிறது. இந்த பதற்றங்கள் குறைந்து உலக அமைதி திரும்பினால், தங்கம் விலை கணிசமாக குறையும்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தினால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்வார்கள். இது தங்கத்தின் தேவையை குறைக்கும். உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் சேமித்து வருகின்றன. ஒருவேளை அவை தங்கத்தை விற்கத் தொடங்கினால், சந்தையில் வரத்து அதிகரித்து விலை குறையும்.
தங்கம் விலை உச்சத்தில் இருக்கும்போது, பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை எடுக்க தங்கத்தை விற்பார்கள். இதனால் சந்தையில் தங்கம் வரத்து அதிகமாகி விலை குறையும். உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீங்கி, பங்குச் சந்தைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் நல்ல லாபம் தரத் தொடங்கினால், மக்கள் தங்கத்தை விடுத்து மற்ற துறைகளில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள்.
இந்தியா போன்ற நாடுகள் தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைத்தால், உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை உடனடியாகக் குறையும். புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது நவீன தொழில்நுட்பம் மூலம் தங்கம் எடுப்பது அதிகரித்தாலோ, வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புண்டு. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் அல்லது டிஜிட்டல் முதலீடுகள் பக்கம் இளைஞர்கள் அதிகம் திரும்பும்போது, ஆபரணத் தங்கத்திற்கான மவுசு குறைந்து விலையில் தாக்கம் ஏற்படும். இந்தியாவில் திருமண விசேஷங்கள் மற்றும் பண்டிகை காலங்கள் முடிந்த பிறகு, தங்கத்திற்கான தேவை குறைந்து விலையில் ஒரு தற்காலிகச் சரிவு ஏற்படும்.