பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலித் அதிகாரி.. நடந்தது என்ன?
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் அவரே தானாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, முனியப்பனிடம் 2023 ஆம் ஆண்டு தெருவிளக்கு பணிக்கான நிதி ஒதுக்கியதற்கான கோப்பினை எடுத்து வர சொல்லியுள்ளார். அப்போது அதனை கண்டுகொள்ளாத முனியப்பனை ரம்யா திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் ரம்யாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ரம்யா பொறுப்பு ஆணையர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். எழுத்து வடிவமாக புகாரளிக்க ரம்யா சென்றபோது ஆணையர் இல்லாததால் மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி ,சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் ரம்யா புகாரளித்துள்ளார். அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு முனியப்பனை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது நகரமன்ற தலைவியின் கணவர் ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டு விட்டு போ பா என முனியப்பனிடம் சொல்லியுள்ளார். அப்போது திடீரென முனியப்பன் ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக சொல்லி அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கினர்.
விசாரணை செய்ததில் அரசு ஊழியர் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் காலில் விழுந்த முனியப்பன் தனது கையை ரம்யாவின் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதால் பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்டதாக திண்டிவ்னம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.