Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal Container

Continues below advertisement

நாமக்கல்லில் சினிமா பாணியில் கொள்ளையர்கள் சென்ற கண்டெய்னர் லாரியை  போலீசார் சேஸ் செய்து பிடித்து அதிரடி காட்டியுள்ளனர்.  லாரியின் உள்ளே சொகுசு கார்.. ஏடிஎம் மெஷின் மற்றும் கட்டுக்கட்டாக பணத்துடன் வடமாநில கொள்ளையர்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. அப்போது பள்ளிகுழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குமாரபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வந்த குமாரபாளையம் காவல்துறையினர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாக சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் முன் வாகனத்தை நிறுத்தி முயற்சி செய்தனர். ஆனால் கண்டெய்னர் லாரி காவல்துறையினர் வாகனம் மீது மோதும் வகையில் வந்ததால் காவல்துறையினர் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியை தாக்கினர். இதனால் நிலைகுலைந்து வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வாகனத்தை சூழ்ந்து உள்ளே செல்ல முயற்சி செய்த போது அங்கு சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கண்டெய்னர் கதவை மூடிவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கண்டெய்னர் லாரி கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஏ.டி.எம் மிஷின் கொள்ளையர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி மேற்கொண்டனர். 

லாரியின் உள்ளே சொகுசு கார்.. ஏடிஎம் மெஷின் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சூர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தான் கண்டெய்னர் லாரியில் இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், கண்டெய்னர் லாரியில் இருந்த மூன்று திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் திருடர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


கொள்ளையர்கள் கடப்பாரையால் தாக்கியதில் எஸ்ஐ ஒருவர் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் கேரள போலிசாரும் தமிழ்நாடு விரைந்துள்ளனர்.
கொள்ளையர்களை சினிமா பாணியில் 30 வாகனங்களில் சேஸ் செய்து போலீசார் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram